🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை அதிமுக மாநாட்டிற்கு எதிர்ப்பு - 68 DNT சாதிகள் கூட்டமைப்பு முடிவு

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகள் இடம்பெற்றுள்ள சீர்மரபினர் நலக்கூட்டமைப்பு மதுரையில் நாளை மறுநாள் நடத்தும் அதிமுக மாநாட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, DNT பட்டியலுள்ள சாதியினர் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு,

நாடுமுழுவதுமுள்ள DNT வகுப்பினருக்கு பல கோடி மதிப்பிலான உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதை, தமிழகத்தைச் சேர்ந்த DNT மக்களால் பயன்படுத்தமுடியாமல் உள்ளது. இதற்கு 1979 எம்ஜிஆர் ஆட்சியில் DNT பிரிவினரை DNC என்று வகைப்படுத்தியதே காரணமாக இருந்துவருகிறது. அப்போது கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியுள்ள இந்த சமுதாயத்தினருக்கு எம்ஜிஆர் அரசின் உத்தரவு குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஏறக்குறைய 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று இச்சமூகங்கள் கல்வியில் அடைந்த முன்னேற்றம் காரணமாக  பல்லாண்டுகளாக மத்திய அரசின் சலுகைகளை பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் மட்டும் சாதி சான்றிதழில் இந்த மாறுதல் செய்யப்படாமல் இருந்திருந்தால் டிஎன்டி பிரிவிலுள்ள 68 சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் இன்றடைந்துள்ள முன்னேற்றத்தை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு முன்பே எட்டியிருக்க முடியும். 


தற்போது மத்திய அரசு அமைத்துள்ள ரோகிணி ஆணையம் மத்திய அரசுப்பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இடதுக்கீட்டை மூன்றாக பிரித்து டிஎன்டி பிரிவுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தனித்தொகுதி வழங்குவதுபோல்  டிஎன்டி பிரிவினருக்கும் தனித்தொகுதி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.

எனவே சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதியினர் 1979-க்கு முன்பிருந்ததுபோல் DNT சான்றிதழ் வழங்க வேண்டும் என்று 2014 முதல் போராடி வருகின்றனர். தொடர் போராட்டத்தின் பலனாக எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது டிஎன்டி போராட்டக்காரர்களோடு நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக உறுதி வழங்கினர். ஆனால் அளித்த வாக்குறுதிக்கும் மாறாக டிஎன்சி/டிஎன்டி என்று இரட்டைச்சான்றிதழ் வழங்கினர்.  அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிஎன்டி சமூகத்தினர் ஓ.பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


நாடாளுமன்ற தேர்தலின்போதும் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்து வந்தநிலையில் அரசோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை டிஎன்டி பிரிவினர் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் பேசிய அமைச்சர்கள் கண்டிப்பாக செய்து தருவதாக வாக்குறுதியளித்தாலும், கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதற்கு மத்தியில் 2020 ஆகஸ்டு 18 ஆம் தேதி மத்திய அரசு டிஎன்டி மக்கள்தொகை புள்ளிவிவரங்களை திரட்ட ஒரு அதிகாரியை நியமிக்கக்கோரி எல்லா  மாநில அரசுக்கும் உத்தரவிட்டது. இதையாவது நடைமுறைப்படுத்தக்கோரி டிஎன்டி தரப்பில் வலியுறுத்தியபோது, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதினார். ஆகவே இதையும் கிடப்பில்போட்டு டிஎன்டி மக்களை பழிவாங்கியது அதிமுக அரசு. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஏற்கனவே போராடிக்கொண்டுள்ள 68 சமுதாய மக்களை பொருட்படுத்தாமல், 2021 சட்டமன்றத்தேர்தல் அறிவிப்பிற்கு அரை மணி நேரம் முன்பு தொட்டிய நாயக்கர் மற்றும் டிஎன்டி உள்ளிட்ட 115 சாதிகள் பயன்படுத்தி வந்த 20% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து வன்னியர் ஒருசாதிக்கு மட்டும் 10.5%மும், 93 சாதிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரங்கேற்றினார்.

இதனால் வெகுண்டெழுந்த டிஎன்டி சமுதாயத்தினர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வை தோற்கடிக்க கங்ஙணம் கட்டி வேலை செய்து எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல கட்ட சட்டப்போராட்டம் நடத்தி வன்னியர் இடஒதுக்கீடை ரத்து செய்தது. இந்த கால இடைவெளியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மாணவர் சேர்க்கையில் பலநூறு இடங்களை டிஎன்டி சமுதாயத்தினர் இழந்தனர். இதேபோல் அரசு வேளை வாய்ப்பிலும் பல இடங்கள் பறிபோனது. 

எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் டிஎன்டி சமுதாயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் பல துன்பங்களையும், இழப்புகளையும் சந்திக்க நேரிட்டது. இதனால் டிஎன்டி மக்களுக்கு அதிமுக மீது ஏற்பட்டுள்ள கோபம் மூன்றாண்டு கழிந்தும் சற்றும் தணியாமல் இருந்துவருகிறது. தற்போது ஆளும் திமுக அரசுக்கெதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தும் வேளைகளில் இறங்கியுள்ள டிஎன்டி சமுதாயத்தினர், அதிமுக அறிவித்துள்ள மதுரை மாநாடு அறிவிப்பால் மீண்டும் களத்திற்கு வந்துள்ளனர். இதன் எதிரொலியாக நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டது பரபரப்பான நிலையில், மாநாடு நடைபெரும் 20 ஆம் தேதி தீவிர போராட்டத்தில் இறங்கவுள்ளதாக நேற்று நடைபெற்ற டிஎன்டி சமுதாய அமைப்புகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு நிலவிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆளும்கட்சிக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக சீர்மரபினர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved