🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாமக்கல்லில் 6000 சதுரடியில் கட்டிடம் - பூமி பூஜையுடன் தொடக்கம்.

நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பில் மூன்று தளங்கள் கொண்ட 6000 சதுரடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (23.08.2023) காலை நடைபெற்றது. இதன் விவரம் வருமாறு, 


நாமக்கல் மாவட்டத்திலுள்ள 130 க்கும் மேற்பட்ட தொட்டிய நாயக்கர் சமூக மக்களை ஒருங்கிணைத்து, சமூக மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் மறைந்த ரங்கசாமி அவர்களை செயலாளராகவும், மாவட்ட கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.மு.பழனிச்சாமி அவர்களை தலைவராகவும், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.சின்னுசாமி அவர்களை பொருளாளராகவும் கொண்டு செயல்படத் தொடங்கிய இந்த அறக்கட்டளையானது, உறுப்பினர் கட்டணமாக ரூ.5000/- வீதம் முதல்கட்டமாக 1000 நபர்களை அடையாளங்கண்டு உறுப்பினராக சேர்க்கும்பணியில் ஈடுபட்டு வந்தது.  


இதற்கிடையே,  செயலாளரும், முன்னாள் டிஎஸ்பி யுமான ரங்கசாமி அவர்களின் திடீர் மரணம் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்டுவதில் தொய்வு ஏற்பட்டது. 

இந்த தொய்வை ஈடுகட்டும் வகையில் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதில் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை முக்கியப் பங்காற்றியது. 


இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அறக்கட்டளை பணிகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.  இதன் விளைவாக  அறக்கட்டளைக்கு சொந்தமாக நாமக்கல் மாவட்ட  கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி அறக்கட்டளை பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக அதேவேகத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடத்தப்பட்டு, கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது, 


உறவுகளுக்கு வணக்கம். இன்று (23.08.2023) காலை 7:45 மணி அளவில் நமது தொட்டி நாயக்கர் சமுதாய அறக்கட்டளைக்கான கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தலைவர் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுள் மற்றும் உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


6000 சதுர அடி பரப்பளவில் சுமார் ஒரு கோடி 31 லட்சம் மதிப்பில் மூன்றடுக்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தக்காரரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளன. கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு நம் மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, உறவுகள் நம் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, ஒவ்வொருவரும்  தமது சொந்தக் கட்டிடமாக நினைத்து, கட்டடத்திற்கான நிதி ஒரு கோடியே 32 லட்ச ரூபாயை எட்டுவதற்கு  தங்களால் முடிந்த அளவுக்கு நிதி வழங்கி உதவிட வேண்டுமமென அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved