🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ரஸ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்ததில் நிலவில் ஏற்பட்ட 10 மீட்டர் பள்ளம்

நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு முன்பாக, லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காஸ்மாஸ் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழேவிழுந்து நொறுங்கியது.

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை, நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா விண்வெளிப் போட்டி:

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகின் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் சர்வதேச அரசியல், ராணுவ, பொருளாதார அரங்கில் மட்டுமின்றி விண்வெளியிலும் போட்டியிட்டன. சோவியத் ஒன்றியம்1955இல் சோவியத் விண்வெளித் திட்டத்தைத் தொடங்க, பதிலடியாக அமெரிக்கா 1958-ம் ஆண்டு தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் ஏஜென்சியான நாசாவை அறிமுகப்படுத்தியது. இந்த போட்டி ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள் அறிமுகத்துடன் தொடங்கியது.

நிலாதான் சூரியனுக்கு மிக அருகில் உள்ள வான்பொருள் என்பதால் அதன் மீது அந்த இரு வல்லரசுகளின் பார்வையும் விழுந்தது. லூனா என்ற லத்தீன் சொல்லுக்கு நிலா என்று பொருள். ஆகவே, நிலவை ஆய்வு செய்யும் தனது திட்டத்திற்கு லூனா என்று பெயர் சூட்டிய சோவியத் ஒன்றியம், லூனா வரிசையில் அடுத்தடுத்து விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியது.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

1959ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறங்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக லூனா-2 வரலாறு படைத்தது. லூனா 2 நிலவில் இறங்கிய பிறகு, அது நிலவின் மேற்பரப்பு, கதிர்வீச்சு மற்றும் காந்தவீச்சுகளைப் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்த வரலாற்று சாதனை, நிலவில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வெற்றி நிலவில் மேலும் பல ஆய்வுகளுக்காக மனிதர்களை அனுப்புவதற்கும் வழி வகுத்தது.

விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர், சந்திரனில் தடம் பதித்த முதல் நாடு, லைகா என்ற நாயை அனுப்பியதன் மூலம் சந்திரனுக்கு விலங்கை அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்த நாடு என்று சோவியத் ஒன்றியம் அடுத்தடுத்து பல பெருமைகளை தனதாக்கியது. இதன் அடுத்தக்கட்டமாக நிலவுக்கு மனிதர்களை யார் அனுப்புவது என்று அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியில், 1969-ம் ஆண்டு அப்போலோ 11 விண்கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதராக புகழ் பெற, அமெரிக்கா முந்திக் கொண்டது.

1976-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் அனுப்பிய லூனா-24 விண்கலம்தான் நிலவுக்கு அந்த நாடு அனுப்பிய கடைசி விண்கலம் ஆகும். நிலா மட்டுமின்றி செவ்வாய், வெள்ளி மற்றும் வேற்று கிரக ஆய்வுகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்கள் என அந்த முயற்சிகளும், போட்டிகளும் அடுத்தடுத்த கட்டத்தைத் தொட்டன.

விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் ரஷ்யா:

1990-களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்ட இடர்பாடுகளில் இருந்து மீண்டு வர ரஷ்யாவுக்கு சற்று காலம் பிடித்தது. பொருளாதார பிரச்னைகளால் ரஷ்யாவால் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த கால கட்டத்தில் சோவியத் ஒன்றியம் விண்ணில் நிறுவியிருந்த மிர் விண்வெளி நிலையம் செயலிழந்து போனது.

சுமார் 20 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக சற்று நிமிர்ந்த பின்னர் ரஷ்யா மீண்டும் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த இடைவெளியில் 2008-ம் ஆண்டு நவம்பர் 18, சந்திரயான்-1 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் மோதச் செய்து இந்தியா ஆய்வு செய்தது. சந்திராஸ் ஆல்டிடியூட் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர் (Chandras Altitute Composition Explorer) மூலம் சந்திரனின் தாக்க ஆய்வு செய்த இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று நிலவில் தண்ணீர் இருப்பதாக அறிவித்தது.

நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான். சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் தரையிறக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தோல்வியடைந்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரயான்-3 என்ற பெயரில் அதே முயற்சியை இந்தியா மீண்டும் செய்கிறது.

அதேநேரத்தில், மீண்டும் விண்வெளி ஆய்வில் கவனத்தை குவித்த ரஷ்யாவின் பார்வை, சோவியத் ஒன்றியத்தைப் போலவே நிலவின் மீதே முதலில் பட்டது. ரஷ்யாவும் நிலவின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய தீர்மானித்தது. அதற்காக லூனா-25 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிட்ட ரஷ்யா, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தாமதமானது. அன்றைய தினம் அந்த விண்கலம் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved