🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உறுப்பு தானத்தால் இறந்தும் உயிர்வாழும் மருத்துவர் புவனேஸ்வரி!

மருத்துவர் புவனேஸ்வரி - வயது 55, சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி 2023 புதிதாக இணைந்த மருத்துவப் படிப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்தார்.  

அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை செய்யப்பட்டு அருகில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மூளைச் சாவு அடைந்து விட்ட நிலையில் அவரது நெருங்கிய உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில் அவரது கல்லீரலும் சிறுநீரகங்களும் அவற்றுக்காக காத்திருந்த நபர்களுக்குப் பொருத்தப்பட்டன. 

இதன் மூலம் இறந்தாலும் அவரது உறுப்புகளின் பலனால் மூன்று உயிர்கள் ஆயுள் நீட்சி பெற இருக்கின்றன. 

இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உறுப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்று காத்திருக்கிறார்கள். 

ஆயினும் உறுப்பு கொடை குறித்த விழிப்புணர்வின்மையாலும் மூடநம்பிக்கைகளாலும் 10லட்சம் மக்கள் தொகைக்கு 0.86 என்ற அளவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இந்த சதவிகிதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 65 என்ற அளவில் உயர வேண்டும். ஆண்டுதோறும் 2 லட்சம் பேருக்கு சிறுநீரகங்கள் தேவைப்படும் வேளையில் வெறும் 10,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. 

நாள்தோறும்  சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழப்பால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மக்கள் மரணமடைந்து வருகிறார்கள். உறுப்புக் கொடை என்பதை உயிரோடு இருப்பவரும் செய்யலாம். இறந்த நபரிடம் இருந்தும் உறுப்புகள் பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு வழங்கலாம். 

இந்தியாவில் உயிரோடு இருப்பவர்களிடம் இருந்து பெற்று நடக்கும் 70-75 % சிறுநீரக தானங்கள் - பெண்களால் கொடை அளிக்கப்பட்டவையாய் இருக்கின்றன. தனது தாய்க்கு , சகோதரிக்கு என தனது ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முன்வந்திருக்கின்றனர் என்பது பாராட்டுதற்குரிய விசயம். 

இறந்த நபரிடம் இருந்து உறுப்பு கொடையாகப் பெற உள்ள சட்டப்பூர்வமான வழிமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு நபர் - மருத்துவமனையில் இறந்திருந்தால் - அவர் மூளைச்சாவு அடைத்து விட்டார் என்று மருத்துவக் குழு இருமுறை சான்றழித்த பிறகு அவரது நெருங்கிய உறவினரின் ஒப்புதலுடன் மட்டுமே மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்புகளைக் கொடையாகப் பெற முடியும். 

இறந்த நபர் அவர் உயிருடன் இருக்கும் போது உறுப்பு தான / உடல் தான விருப்பம் தெரிவித்து அட்டையே கையில் வைத்திருந்தாலும் கூட இந்திய சட்டப்படி அவர் இறந்த பின் " அவரது குடும்பத்தார் அதிலும் அவரது  நெருங்கிய உறவினரின் ( தாய்/ தந்தை / மனைவி / கணவன் / சகோதரர்) ஒப்புதல் இன்றி உறுப்புகளை எடுத்து பிறருக்கு வழங்க முடியாது. 

மரணமடைதல் புரிகிறது. அது என்ன மூளைச் சாவு? 

மரணமடைவது என்பது இதயம் தனது வேலையை நிறுத்திக் கொள்வது. இதனால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு ரத்தமும் ஆக்சிஜனும் செல்லாமல் முடங்கிப்போய் வருவது "மரணம்" இதை "இதய சாவு" என்று அழைக்கலாம்.வீடுகளில் முதியவர்களுக்கு வயது முதிர்வால் நிகழ்வது இந்த வகையைச் சேரும். இதயம் செயலிழந்து விட்டதால் அவர்களது உறுப்புகளை கொடை அளிக்க முடியாது. 

அதுவே சாலை விபத்துகளில் தலையில் அடிபட்டு மருத்துவமனைகளுக்கு விரைந்து  அட்மிட் செய்ப்படுபவர்கள்/ மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு உடனே மருத்துவமனையை அடைபவர்கள்/ இதய ரத்த நாள அடைப்பு அல்லது செயல் முடக்கம் ஏற்பட்டு உடனடியாக சிபிஆர் செய்யப்பட்டு மருத்துவமனையை அடைந்தவர்களுக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு இதயம் தொடர்ந்து செயல்படும் மருந்துகள் தரப்பட்டு இதயமும் நுரையீரலும் மருந்துகள் மற்றும் வெண்ட்டிலேட்டர் துணை கொண்டு  அதன் பணியை செய்து கொண்டிருக்கும். 

இத்தகையோருக்கு மூளையின் தண்டு பகுதியில் பலமனா அடிபட்டோ / ரத்தக் கசிவோ ஏற்பட்டிருக்கும். 

இதனால் இவர்களால் வெண்ட்டிலேட்டர் மற்றும் மருந்துகளின்றி நுரையீரல் மற்றும் இதயத்தின் செயலாற்றலை தக்கவைக்க இயலாது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள் "மூளைச்சாவு" ஏற்பட்டவர்களாவர். 

இவர்களின் நெருங்கிய உறவினர்களின் ஒப்புதலோடு முக்கிய உடல் உறுப்புகளை அறுவை செய்து வெளியே எடுத்து தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக பொருத்த முடியும்.ஒரு மனிதன் மற்றும் அவனது உறவினர்கள் உறுப்புக் கொடை  செய்ய விரும்பினால்  அவன் இறந்த பிறகு அதன் மூலம் ஒன்பது பேர் நன்மை அடைவர். 

1. சிறுநீரகங்கள்: 

அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு. அதிகமாக கொடை அளிக்கப்படும் உறுப்பும் இதுவே.  மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும்  இரண்டு சிறுநீரகங்களும் தலா ஒரு நபருக்கு என இருவரின் வாழ்வை மேலும்  நீட்டிக்க உதவும்.  டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து விடுபட உதவும்.  உயிருடன் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கு ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும். இறந்த நபரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறுநீரகம் ~ 30 மணிநேரங்கள் உயிரோடு இருக்கும். 

2. கல்லீரல் :

வெளியே எடுக்கப்பட்ட கல்லீரல் 6-12 மணிநேரங்கள்  மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும். உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும். 

3. நுரையீரல் :

இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும். உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும். எனினும் கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது. வெளியே எடுக்கப்பட்டு 4-6 மணிநேரங்கள் உயிர்ப்புடன் இருக்கும். 

4. இதயம் :

இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும். 

5. கணையம் :

இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும்.

6. குடல் :

இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள்  தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். 

இவையன்றி இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம் . விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும் கொடையாக வழங்கப்படும் தோல் - தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன. நாம் உயிருடன் வாழும் போது பிற உயிரை வாழ வைப்பதற்கு உதவுவது,

- உணவுக் கொடை 

- கல்விக் கொடை 

- ரத்தக் கொடை 

நாம் இறந்த பிறகும் பிறர் வாழ உதவுவது

- உறுப்புக்கு கொடை 

பிறர் உலகைக் காண உதவுவது 

- விழிக் கொடை

உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் நம்மால் பலர் பயன்பெற  விழிப்புணர்வடைவோம்.விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பணியின் போதே உயிர்நீத்த டாக்டர் புவனேஸ்வரி அவர்களின்  தியாகத்தையும் அவரது குடும்பத்தினரின் இரக்க குணத்தைப் போற்றும் நிமித்தமாய் இந்த கட்டுரையை அவர்களுக்கு கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved