🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நிலவின் தென்துருவத்தில் உறங்கும் பிரக்யான் ரோவர்!

பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும். மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் சமீப காலமாக மிகவும் இருள் நிறைந்த நிலவின் தென் துருவம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியை அடைவதற்காக அமெரிக்கா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சிசெய்து வருகின்றன. குறிப்பாக, 2024-ம் ஆண்டில் சீனா தென்துருவத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவும் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு நிலவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டிகள் வல்லரசு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சூழலில்தான் தென் துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தை தரையிறக்கி உள்ளது இந்தியா. 

இதற்கிடையே, நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டை  இஸ்ரோ ஆறிவியல் ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை   தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- 

இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. நிலவில் தற்போது இரவு ஏற்பட்டு இருப்பதால் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணியை முடித்து தூக்க நிலைக்கு சென்றுள்ளது. நிலவில் பகல் வரும்போது மீண்டும் அது ஆய்வுப் பணியை தொடங்கும். பிரக்யான் ரோவரின் ஆய்வுக்குப் பிறகு நிலவின் தென்துருவத்தில் உள்ள கனிமங்கள் குறித்து நமக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. நீர், வாயு மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் நிலவில் உள்ள கனிமங்கள் குறித்த முழு விவரங்கள் நமக்கு கிடைக்கும். அதன்பிறகு மனிதன் வாழ உகந்த இடமாக நிலவு இருக்குமா என்பது குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.  பின்னர், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந் துரையாடினார். மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved