🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்ட துணை அமைப்பாளராக நாகேந்திரன் நியமனம்!

தமிழகத்தை ஆளும் கட்சியான தி.மு.க-வில் 20-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் உள்ளன. இதில் இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட சில துணை அமைப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் அணி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.  அக்கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரான கார்த்திகேய சிவசேனாதிபதி பொறுப்பில் சுற்றுச்சூழல் அணி செயல்பட்டு வருகிறது.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் குறித்த அறிவிப்புகள் மிகமுக்கிய இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


திமுகவில் வழக்கமாக இளைஞரணி வலுவாக இருப்பது போல் தோன்றும், ஆனால் பிற அமைப்புகள் அரசியல் ரீதியாக பல வரலாற்றுச் சாதனைகளை சத்தமில்லாமல் செய்து முடித்திருப்பது  அரசியலை ஆழ்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். உதாரணமாக வழக்கறிஞர் அணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை  திறம்பட கையாண்டுள்ளது. அதேபோல் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கு தண்ணிகாட்டியது. அவ்வழக்கில் இறுதிவரை செந்தில்பாலாஜியை டெல்லிக்கு அழைத்து சென்று திகார் சிறையில் அடைக்கும் முயற்சியை முறியடித்து மற்ற மாநிலங்களை திரும்பிப்பார்க்க வைத்தது. 


தற்போது பருவநிலை மாற்றம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஐ.நா, ஐரோப்பிய யூனியன், நேட்டோ, பிரிக்ஸ் என பல்வேறு பெயர்களில் ஒன்று கூடும் நாடுகளின் விவாதங்களில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் பிரதான பேசுபொருளாக இருந்தது சுற்றுச்சூழல் குறித்தான விசயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகள் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு அதிமுக்கியத்துவம் குறித்து விவாதித்து வரும் நிலையில், ஐ.நா.விலும் இதற்கான சிறப்புக் கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இதில் அரசுகள் மட்டுமின்றி அமைப்புகளும் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றன. 

இந்நிலையில் திராவிட முன்னேற்றக்  கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணியின் துணை அமைப்பாளராக தொட்டிய மண்ணரை, சத்யாநகர் எஸ். நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பட்டதாரியான நாகேந்திரன் தற்போது இறுதியாண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் துறைக்கு வானமே எல்லையாக ஐ.நா.வரை சென்று பேசக்கூடிய வாய்ப்புள்ள நிலையில் நாகேந்திரன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். 

எஸ்.நாகேந்திரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும், திமுக தலைமைக்கும் கம்பளத்தாரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved