🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிந்துவெளி பண்பாட்டை ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த நாள் இன்று!

சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924. ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர். 


சிந்துவெளி நாகரிகத்தை ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாளை முன்னிட்டு “சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்” என்கிற தலைப்பில் ’ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்’ இணையவழி கலந்தாய்வு கூட்டமொன்றில் சிறப்பு உரையாளர்களாக சிந்துவெளி ஆய்வுமையத்தின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வில் "சிந்துவெளி ஆய்வு – ஒரு அறிமுகம்" என்ற கலந்தாய்வில் உரையாற்றிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் சிந்து சமவெளி ஆய்வு தொடங்கியது முதல் அது எப்படி வீழ்ந்திருக்கலாம் என்பது வரையிலான விரிவான அறிமுகத்தினை அளித்தார். அதன் விவரம் வருமாறு, 

ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும், வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham 1853-56) தான் முதன்முதலில் சிந்து சமவெளி ஆய்வைத் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வை அவர் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் அவருக்கு பௌத்தத்தின் தொன்மம் குறித்து இருந்த தேடலே ஆகும். பெளத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது என்று சுந்தர் கணேசன் தனது உரையில் தெரிவித்தார். 


மேலும் சிந்துவெளியானது ஒன்றரை மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவிலான பெரிய நாகரிகமாகும். இந்த நாகரிகம் கி.மு 2600-ம் ஆண்டு தொடங்கி கி.மு 2500 – 2000 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தது என்று கூறி, அதன் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார்.

சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய அம்சங்கள்:

சுட்ட செங்கற்கள் (செங்கல் என்பது செங்குத்தாக இருப்பதனால் பெயர் வந்ததா இல்லை சிவப்பாக இருப்பதால் அதற்கு அப்பெயர் வந்ததா என பாலகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்).

சிந்துவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது.

சிவப்பு – கருப்பு மற்றும் கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

செம்பு மற்றும் வெண்கலங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உருவ பொம்மைகள் தாய் தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன.

மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், தார் கொண்டு தண்ணீர் கசிவைத் தடுத்து கட்டமைக்கப்பட்ட பெரிய குளம், பொது தானியக் களஞ்சியம் இருப்பது இந்த நாகரிகத்தில் உபரி கிடைத்ததற்கான சான்றாக அமைந்துள்ளது.

களிபங்கன் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிணற்றுக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட செங்கற்கள், மண் மற்றும் செம்பினால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள்.


இந்த நாகரிகம் வீழ்ந்ததற்குக் காரணங்களாக காலநிலை மாற்றம் அல்லது வெளியில் இருந்து வந்த படையெடுப்பு என்பவை இருக்கலாம். உள்ளிருந்து எழுந்த கிளர்ச்சிகளாகக் கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இனம் ஒரு அடியாக அழிய வாய்ப்பு இல்லை எனவும், அங்கு இருந்த மக்கள் அந்த பகுதிகளிலிருந்து சிதறி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கக் கூடும் என்கிறார். 

1924-க்குப் பின் சுனிதி குமார் சாட்டர்ஜி என்கிற கட்டுரையாளர் மற்றும் ஃபாதர் ஹென்றி ஹெராஸ் என்கிற ஆய்வாளர் போன்றோரும் இதை திராவிட நாகரிகம் என்றே கூறியுள்ளனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved