🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புகழ் பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இராஜகம்பளத்தாருக்கு இலவச பயிற்சி!

இந்தியாவில் புகழ்பெற்ற முன்னனி ஐஏஎஸ்  பயிற்சி நிறுவனமான சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் திருமதி.வைஷ்ணவி சங்கருடன் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் இன்று சந்தித்துப்பேசினார். இதன் விவரம் வருமாறு,

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமியும், மேத்தா ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து இந்தாண்டு முதல் நடத்தி வரும் அரசுப்பணிகளுக்கான பயிற்சி வகுப்பில் 5 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் படித்து வருகின்றனர். இதில் கடந்த மாதம் நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வில் கலந்துகொண்டு நால்வர் தேர்வெழுதியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த (அக்டோபர்) மாதம் குரூப் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் மேத்தா ஐஏஎஸ் அகாடமியில் தீவிர  பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கிடையே, யூபிஎஸ்சி, குரூப்- 1 மற்றும் 2, வங்கிப்பணி உள்ளிட்ட பல முக்கியமான பிரிவுகளுக்கான பயிற்சி வழங்குவதில் இந்திய அளவில் முன்னனி நிறுவனமாக இருப்பது சென்னை, அண்ணாநகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருவது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இதன் நிர்வாக இயக்குனரான திருமதி.வைஷ்ணவி சங்கர் அவர்களை இன்று நண்பகல் 12 மணியளவில் வீ.க.பொ.இராஜகம்பள பொதுச்செயலாளர் சந்தித்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி முதல் தூத்துக்குடி வரை வசித்து வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளாகத்தான் முதல்தலைமுறை பட்டதாரிகள் படித்து வெளிவரும் நிலையில், இதில் அரசுப்பணிகளுக்கு செல்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். குடும்ப பொருளாதார சூழல் காரணமாக போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பாதாக எடுத்துரைத்தார்.

எனவே, மத்திய, மாநில அரசுப்பணிகளில் கம்பளத்தாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், கிராமப்புற ஏழை - எளிய மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தரமான பயிற்சியை, குறைந்த கட்டணத்தில் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அகடாமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி அவர்கள், தகுதியான அதேசமயம் ஆர்வமுள்ள மாணவ-மாணவியர்களை அடையாளங்கண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு இலவசமாகவும், பிற மாணவ - மாணவியருக்கு குறைந்த கட்டணத்திலும் பயிற்சி அளிக்கவும், பிற பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் சங்கர் ஐஏஎஸ் நடத்தும் டெஸ்ட் களில் பங்கேற்க அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் கட்டபொம்மன் அகாடமி சார்பில் நடத்தப்படும் குரூப் தேர்வுகளுக்கான மாணவர் சேர்க்கை விவரம் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved