🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசுக்கெதிரான போராட்டம் தொடங்கியது - சீர்மரபினர் நலச்சங்கம் அறிவிப்பு

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சமூகங்களுக்கு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு.

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சாதிகளுக்கு டிஎன்டி/டிஎன்சி என இரட்டை சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசின் பல உதவிகளை இச்சமுதாயங்கள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1979-இல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட சில குளறுபடி காரணமாக டிஎன்டி என்றிருந்தது டிஎன்சி என மாறியது. இதை எதிர்த்து கடந்த 2014 முதல் சீர்மரபினர் சாதிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக ஒப்புக்கொண்டுவிட்டு அரசாணை வெளியிடும்போது டிஎன்சி/டிஎன்டி என இரட்டை சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு விட்டது. இதனை எதிர்த்து அன்று முதல் இச்சமூகங்கள் போராடி வருகின்றன.


இதற்கிடையே, கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வை தோற்கடிக்க கடுமையான பிரச்சாரத்தில் டிஎன்டி சமூகங்கள் ஈடுபட்டன. இது அன்றைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் சீர்மரபினர் சாதிகளுக்கு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படுமென வாக்குறுதியளித்தார்.


இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக விடம் முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தப்பட்டது. ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக பலமுறை ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி கொடுக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக காலம் தாள்த்தி வருகிறது. எனவே அரசுக்கெதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த சீர்மரபினர் நலச்சங்கம் முடிவுசெய்துள்ளது. இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 30 வரை அரசுக்கு அவகாசம் அளித்து முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் மீண்டும் மனு வழங்க தீர்மானிக்கப்பட்டது. 


அதனடிப்படையில் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் டிஎன்டி சாதிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் அறக்கட்டலை தலைவர் மு.ப்ழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சி தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ராமசாமி தலைமையில் போராட்டக்காரர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி மற்றும் சீர்மரபினர்நல சங்கம் சார்பில் சீர்மரபு பழங்குடி சமுதாய மக்களுக்கு தமிழகம் முழுவதும் DNT ஒற்றை சான்று தடையில்லாமல் வழங்க வலியுறுத்தியும் மனு வழங்கப்பட்டது.

இம்மனு மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக சீர்மரபினர் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved