🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தோஷ நிவர்த்தி செய்தும் போரில் உயிர்துறந்த மாவீரன் திப்பு சுல்தான்!

திருமண தடை, தொழில் அபிவிருத்தி, வாஸ்து பரிகாரம் என மனிதர்கள் அன்றாட வாழ்வில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்காக சோதிடர்களை நாடுவதும், அவர்கள் சொல்லும் பரிகாரங்களை செய்து முடிப்பது இந்திய சமூகங்களில் காணப்படும் இயல்பான ஒன்று. அரசர் முதல் ஆண்டி வரை சோதிடத்திலும், பரிகாரத்திலும் நம்பிக்கை வைக்காதவர்கள் மிக மிக சொற்பமே. இன்று 35 வயதைத் தாண்டிய இளைஞர்கள் பலரும் திருமணம் செய்யமுடியாமல் பரிதவிப்பதற்கு சோதிடர்களின் பங்களிப்பு முதனமையானது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மூடநம்பிக்கை உலகம் முழுவதும் பொதுமையானது என்றாலும் இந்தியாவில் ஏராளம். இது இன்று நேற்று தொடங்கியதல்ல. இந்த சோதிடத்தை நம்பி திப்பு உயிரிழந்த சுவாரஸ்யமான தகவல் இதோ...

கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும், மைசூர் இராஜ்யத்தை அரசாண்ட திப்பு சுல்தானுக்கும் 1799 ஆம் வருடம் மே திங்கள் 4 ஆம் தேதி சண்டை நடந்தது. இந்த சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த மாலை வேளையில் திப்பு சுல்தான் குண்டடி பட்டு இறந்தார்.

ஆங்கிலேயர்களோடு சண்டைக்குப் புறப்படுமுன் அன்று காலை பார்ப்பன சோதிடர்களை வரவழைத்து சகுனம் கேட்டார். அன்றைய தினம் கெட்ட நாளாக இருப்பதால் திப்பு சுல்தான் சண்டை செய்யக் கூடாது என்றும், இதற்கு ‘தோஷ நிவர்த்தி’ செய்தால் அந்தக் குற்றம் நீங்கிப் போய்விடும் என்றும், பிறகு சண்டை செய்யலாம் என்றும் ஆலோசனை சொன்னார்கள்.

‘தோஷத்தை’ எப்படி நிவர்த்தி செய்வது என்று பார்ப்பன சோதிடர்களிடம் ஆலோசனை கேட்கிறார் திப்பு. சுபகாரியப் புலிகளாகிய அந்தப் சோதிடர்கள் கறுப்பு நிறமுள்ள எருமை, கறுப்பு எருது, கறுப்பு ஆடு, கறுப்புத் துணி, கறுப்புத் தலைப்பாகை, 90 ரூபாய், எண்ணெய் நிறைந்த இரும்புக் குடம் இவைகளைத் தானம் செய்தால், அந்தக் கெட்டநாள் நல்ல நாளாய் மாறிவிடும் என்று சொன்னார்கள்.

ஆலோசனையை ஏற்றுக்கொண்டு மாடு, எருமை, துணி, ரூபாய் முதலியவைகளை அந்தன சோதிடர்களுக்கு தானம் செய்தார் திப்பு சுல்தான். எண்ணெய்க் குடத்தை தானம் செய்வதற்கு முன், எண்ணெய் குடத்தில் திப்பு தன் முகச் சாயலைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவரும் எண்ணெய்க் குடத்தில் தன் முகச் சாயலைப் பார்த்து தோஷத்தை நீக்கிக்கொண்டதாக நினைத்துக் கொண்டார். பார்ப்பன சோதிடர்கள் தங்களுக்கு கிடைத்த வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இவ்வளவு சோதிடம் பார்த்தும், தோஷத்தை நீக்கியும் பார்ப்பனருக்கு தானம் செய்தும் திப்புவிற்கு அந்தக் கெட்ட நாள் நல்ல நாளாக மாறாமல், கெட்ட நாள் கெட்ட நாளாகவே இருந்து விட்டது. ஆம், சோதிடம் பார்த்து தோஷத்தை நீக்கிக் கொண்ட அன்றைய தினம் சாயங்காலமே திப்பு குண்டுபட்டு இறந்து போனார்.

கிழக்கிந்திய கம்பெனியார் அன்றைய தினமே திப்பு ராஜ்யத்தையும், சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஜோதிடப் புரட்டர்களின் வார்த்தை பொய்யாகிவிட்டது. சோதிடப் புரட்டர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கெட்ட நாள், நல்ல நாள், தோஷம், பரிகாரம் என்று ஜனங்களை மயக்கி தங்களுக்குப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறார்கள். இவைகைள எல்லாம் பாமர ஜனங்கள் நம்பி கைப்பொருளை இழந்து நஷ்டமடைகிறார்கள்.

திப்பு சுல்தான் மகமதியராய் (முஸ்லிம்) இருந்தும் இந்தச் சோதிடப் புரட்டர் வார்த்தைக்கு ஏமாந்தார் என்றால், மூடநம்பிக்கை நிறைந்த சாமானிய மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்த ஜோதிட நம்பிக்கை, ஜனங்களிடமிருந்து என்றுதான் ஒழியுமோ?

“குடிஅரசு” மே 8 1932 இதழிலிருந்து...
தகவல்: மே.கா.கிட்டு, மேட்டூர்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved