🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாக்குறுதியை மறந்த மகன்! - தந்தையின் சமாதியில் மனு!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 டிஎன்டி சமூகங்களுக்கு தமிழகத்தில் டிஎன்சி/டிஎன்டி என இரட்டை சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாடுமுழுவதுமுள்ள 258 டிஎன்டி சமூகங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பலகோடி ரூபாய் உதவித்தொகையினை தமிழ்நாட்டிலுள்ள 68 டிஎன்டி சமூகங்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. ஆகையால் தமிழக அரசு இச்சமூகங்களுக்கு டிஎன்சி/டிஎன்டி என இரட்டைச்சான்றிதழ் வழங்காமல் நாட்டில் பிறபகுதியில் உள்ளதுபோலும், தமிழகத்தில் 1979-க்கு முன்பிருந்தது போன்றும் டிஎன்டி என ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 2014 முதல் பலகட்டப்போராட்டங்கள் நடத்தியும் உருப்படியான பலன் இல்லை. இதனால் கொதிப்படைந்த இச்சமூகங்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அன்றைய ஆளும்கட்சியான அதிமுக வை வீழ்த்த களத்தில் இறங்கி போராடியது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அன்றைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒற்றைச்சான்றிதழ் கேட்டு போராடி வரும் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், இன்னும் ஒற்றைச்சான்றிதழ் வழங்க எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வில்லை. இதுகுறித்து பல முறை அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்தும்கூட அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. இதுசம்மந்தமாக தமிழக முதல்வரை சந்திக்க எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்காத நிலையில், ஏழை எளிய பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு சந்தித்து தங்கள் குறைகளை எடுத்துச்சொல்ல, எப்போதும் தன் இல்லத்தின் வாயில்கதவையும், நிர்வாகத்தின் காதுகளையும் திறந்தே வைத்திறந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியில் டிஎன்டி சமூகங்களின் கோரிக்கை நிறைவேற்றித்தரும்படி மனு அளிக்கும் போராட்டத்தை நடத்த விடுதலைக்களம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் இப்போராட்டத்தில் அரசின் பாராமுகத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையும் பங்கேற்க இருப்பதாக அதன் தலைவர் மு.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்காக நாமக்கல் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான சமுதாய உறவுகள் தனிப்பேருந்து மூலம் வரவிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், இப்போராட்டத்தில் சென்னையிலுள்ள உறவுகள் பெரும்திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் சீர்மரபினர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பி.இராமராஜ் மற்றும் சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.இராமராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved