🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்டி சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி திராவிடர் கழக தலைவருடன் சந்திப்பு!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சமுதாயங்களுக்கு  டிஎன்சி/டிஎன்டி என தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைசாதிச்சான்றிதழுக்கு மாற்றாக டிஎன்டி என ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமெ நீண்ட நாட்களாக போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

கடந்த 2021-சட்டமன்றத் தேர்தலின்போது இப்பிரச்சினை தேர்தல்களத்தில் பெரிய அளவில் எதிரொலித்தது. அதுவரை டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்காத அதிமுக தேர்தல் களத்தில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. அப்பொழுது தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சியமைத்தவுடன் டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படுமென வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்து இரண்டரையாண்டு காலம் கடந்துவிட்ட நிலையில் திமுக அரசு வாக்குறுதியளித்தபடி டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள சீர்மரபினர் நலச்சங்கம், பல்வேறு வகைகளில் தமிழக அரசுக்கு அழுத்தம்கொடுத்து வருகிறது. இதனொரு பகுதியாக திமுக அரசை ஆதரிக்கும் அதன் தாய் அமைப்பான திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் செயல்தலைவர் பெ.இராமராஜ், துணைத்தலைவர் எஸ்.இராமராஜ் மற்றும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் ஆகியோர் சந்தித்து டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்க வாக்குறுதியளித்த முதல்வருக்கு அதை உடனடியாக நிறைவேற்றிட ஆவண செய்யுமாறு மனுவும், சமூகநீதி மலரும் அளித்து வேண்டுகோள் வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திராவிடர் கழக துணைத்தலைவர் கலிபூங்குன்றன் மற்றும் துணைப்பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்.ஆர், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இணைஅமைப்புச்செயலாளர் அன்பகம் கலை, , சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ஆர்.இராஜீவ்காந்தி ஆகியோர்களிடம் தமிழக முதல்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரும் மனுவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி மனு அளித்தனர். இதுதவிர, திராவிட தமிழர் இயக்கப்பேரவை தலைவர் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் அவர்களைச்சந்தித்து மனுவும், சமூகநீதி மலரும் வழங்கினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved