🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT சான்றிதழுக்காக தொட்டிய நாயக்கர்களின் தொடரும் லாபி!

40 ஆண்டுகால அறியாமையால் மத்திய அரசு DNT சமூகங்களுக்கு அளித்து வரும் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களில் ஒரு ரூபாய் கூட தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 டிஎன்டி சாதிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிடப்பட்டுள்ளது. 

2014- இல் DNT குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் இருந்து நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, முந்தைய அதிமுக அரசு அதுல்யா மிஸ்ரா தலைமையில் 2019-இல் ஆணையம் அமைத்து, அந்த ஆணையத்தின் பரிந்துரைத்ததின் விளைவாக DNT ஒற்றைச் சான்றிதழ் கிடைக்க இருந்த நிலையில், சில அதிகாரிகளின் சூழ்ச்சியின் காரணமாக மாநில அரசுக்கு DNC என்றும் மத்திய அரசின் பயன்பாட்டிற்கு DNT என்றும் இரட்டைச்சான்றிதழ் வழங்கி குளறுபடி செய்தனர். 

இதனை சரி செய்து DNT என்று ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தான் 68 சமூகங்களின் ஒரே கோரிக்கை. இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் சீர்மரபினர் நலச்சங்கம் நடத்தி வருகிறது. 

இதற்கிடையே, கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது இன்றைய தமிழக முதல்வர் DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தெருமுனைப் பிரச்சாரம், அரசாணை எரிப்பு, சமூக ஊடக டிரெண்டிங் என பல வடிவங்களில் முயற்சித்து வருகிறது. 

சீர்மரபினர் நலச்சங்கத்திலுள்ள 68 சமூகங்களும் ஒவ்வொரு வகையில் தனித்தனியாகவும், கூட்டாகவும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் ஏற்பாட்டில் DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதில் சட்டப்படியான எந்த சிக்கலும் இல்லை என்பதை தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள திமுக வின் முன்னனி தலைவர்களுக்கும், அக்கட்சியின் சட்டத்துறைக்கும்,  கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து விளக்கி, தமிழக அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. 


இதன் தொடர்ச்சியாக தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் கடந்த வாரம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தமிழக முதல்வர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல்தலைவர் பெ.இராமராஜ் ஆகியோர் தலைமையில் வேட்டுவக்கவுண்டர், முத்தரையர், ஊராளிக்கவுண்டர், கள்ளர், மறவர் சமுதாய தலைவர்கள் நேற்று (11.10.2023) காலை தமிழக அமைச்சர் கே.என்.நேரு அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பனுக்கு பரிந்துரை செய்து, அவரைச் சந்தித்து விளக்கமளிக்க கூறியுள்ளார். 




 அதன்பிறகு சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களை சந்தித்து இப்பிரச்சினை குறித்து சமுதாய தலைவர்கள் விளக்கமாக எடுத்துக்கூறினர். சுமார் அரைமணி நேரம் இப்பிரச்சினையின் முழு விவரங்களைக் கேட்டுக்கொண்ட பேராசிரியர் சுப.வீ, நாளை (இன்று) முதல்வருடனான சந்திப்பு இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் இது குறித்து பேசுவதாகவும், இல்லையேல் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலருக்கு பரிந்துரை செய்து பிரச்சினைக்கு தீர்வுகாண தன்னால் இயன்ற அளவு முயல்வதாக  தெரிவித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved