🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்தியாவின் நெ.1 ஐஏஎஸ் அகாடமியில் இராஜகம்பளத்தாருக்கு பயிற்சி வழங்க தயார்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் நெ.1 ஐஏஎஸ் அகாடமியான சங்கர் ஐஏஎஸ் அகாடமியும், வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியும் இணைந்து, இந்தியக் குடிமையியல் (IAS,IPS,ICS,IFS.IRS, etc.,) அதிகாரிகளுக்கான, இந்திய நடுவண் அரசுப்பணியாளர் தேர்வு முகமை (UPSE) ஆல் நடத்தப்படும் யூபிஎஸ்சி தேர்வு (UPSC) எழுத விரும்பும் இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ, மாணவியருக்கு இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும் பயிற்சி வழங்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் யாரும் இல்லாதது சமுதாய மக்களின் நீண்டகால ஏக்கமாக உள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உயர்பதவிகளை அலங்கரிக்க தகுதியும், திறமையும் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கமுடியாத கையறு நிலையில் சமுதாயம் தத்தளித்து வருகிறது. 

இதனைக்கருத்தில் கொண்டுள்ள வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை செங்குன்றத்தில் கட்டபொம்மன் அகாடமி என்ற பெயரில் ஒரு பயிற்சி மையத்தை தொடங்க திட்டமிட்டு, கடுமையான போராட்டத்திற்குப்பின் முழுவடிவம் பெற்றுள்ளது. அகாடமிக்கான கட்டிடம் தயார் நிலையில் இருந்தாலும், கட்டிடத்தின் அமைவிடம், பொதுப்போக்குவரத்து வசதி, முன் அனுபவம், பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக நமது வளாகத்திலேயே பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாமல் உள்ளோம். இருந்தும், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் சமுதாயம் பின்னோக்கி செல்லும் என்பதை நினைவில்கொண்டு மாற்று ஏற்பாடாக, போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதில் அனுபவமும், திறமையான ஆசிரியர்களையும், நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ள பயிற்சி மையங்கள் மூலம் நமது சமுதாய மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்திட தீர்மானித்தோம்.

அதன் அடிப்படையில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் நமது சமுதாய மாணவர்களிடையே விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட 11 பேருக்கு, சென்னை அண்ணாநகரிலுள்ள மேத்தா ஐஏஎஸ் அகாடமியில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கடந்த ஆறுமாதமாக பயிற்சி வழங்கி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, நமது சமுதாயத்தின் நீண்டநாள் ஏக்கமாக உள்ள இந்திய குடிமையியல் பணிகளில் இராஜகம்பத்தாரும் இடம்பெற வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்கான முதல்கட்ட பணியினை தொடங்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவின் நெம்பர் ஒன் ஐஏஎஸ் அகாடமி என்று சொல்லப்படும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில், இந்திய குடிமையியல் பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெருவதற்காக, புதிதாக தொடங்கப்பட்டுள்ள இரண்டாண்டு பயிற்சி வகுப்புகளில் இராஜகம்பள சமுதாய மாணவர்களும் பயிற்சிபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தொடங்கி 2025 செப்டம்பர் வரை வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதற்காக இலவச பயிற்சி பெறுவதற்கும், சலுகைக்கட்டணத்தில் பயிற்சிபெறவும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, முழுகட்டண விலக்கோடு இலவச பயிற்சிபெற விரும்புவோர், ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியால் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று, அதில் பெறப்படும் மதிப்பெண், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணோடு, இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்ணும் கணக்கிடப்பட்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். இதில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். 

இதுதவிர, கட்டண முறையில் பணம் செலுத்தி பயிற்சிபெற விரும்பும் மாணவ, மாணவியருக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டாண்டுகள் நடைபெறும் Preliminary & Mains தேர்வுகளுக்கான பயிற்சிக்கட்டணம் ரூ.205000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) என்பதலிருந்து ரூ.45000/- சலுகையில் ரூ.160000/- (ரூபாய் ஒருலட்சத்து அறுபதாயிரம்) கட்டணத்தில் பயிற்சி வழங்கவும், சங்கத்தின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ரூ.55000/- சலுகையில் ரூ.150000/- கட்டணத்தில் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஓராண்டு பயிற்சிக்கு ரூ.186000/- (ரூபாய் ஒருலட்சத்து எண்பத்தி ஆறாயிரம்) கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாண்டு கால பயிற்சிக்கு 160000/- என்பது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இராஜகம்பளத்தார் சமுதாயத்தினருக்கு பெறும் உதவியாக இருக்கும். மேலும் சங்க உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிறப்பு கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகப்படியானோர் சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் நிலை ஏற்படும்.

இது தவிர, மாநில அரசுத் தேர்வாணை வாரியம் (டிஎன்பிஎஸ்சி)  சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கும், வங்கிப்பணிக்கான தேர்வுக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குறைந்த கட்டணத்தில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ, மாணவியர் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் கனவுகளை நனவாக்கிட தரமான பயிற்சிபெற்று, தேர்வுகளில் வெற்றிவாகைசூடி இழந்துபோன சமுதாயத்தின் பெருமையை மீட்டெடுக்க வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved