🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அக்'16 இல் மாவீரனுக்கு மரியாதை - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 224-வது நினைவுநாள் வரும் 16'ஆம் தேதி திங்கள்கிழமை நாடுமுழுவதும் அனுசரிக்கப்படவுள்ளது. பல்வேறு அமைப்புகளும் நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 224-வது நினைவு நாளன்று, அவர் தூக்கிலடப்பட்ட கயத்தாரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட அக்கட்சியின் முன்னனி நிர்வாகிகள் அடங்கிய குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி க.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு,

முன்னதாக,  கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அதிமுக வின் மூத்த தலைவரும், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளருமான கலாநிதி அவர்களின் ஆலோசனைப்படி, சென்னை வீரபாண்டிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளான ஜனவரி 3-ஆம் தேதியும், நினைவுநாளான அக்டோபர் 16'ஆம் தேதியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகள் முறையே மதுரை மற்றும் கயத்தாரில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை உறுதி செய்யும் வகையில், கழகத்தின் சார்பில் நிரந்தர நிலையாணை ஒன்றை பிறப்பிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களிடம் கடிதம் வழங்கப்பட்டது. 

அன்று இக்கடிதத்தை விருதுநகர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.கே.கண்ணன், நகரமன்ற உறுப்பினர் சரவணன், மருலூத்து ஊராட்சி மன்ற தலைவா் ஈரையா, இனாம்ரொட்டியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில், எடப்பாடியாரிடம் நேரடியாக கடிதத்தை வழங்கி கோரிக்கை வைத்தார் மூத்த தலைவர் கலாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜகம்பளத்தாரின் இக்கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிரந்தர நிலையாணை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 3'ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் விழாவின்போது தலைமைக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் சி.ராஜூ, கே.டி.இராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் 16' இல் அனுசரிக்கப்படவுள்ள 224 வது நினைவுநாளின்போது கயத்தாரில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் சி.ராஜு, கே.டி.இராஜேந்திரபாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், மற்றும் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை ஆகியோர் தலைமையில் அதிமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாகவும், இதில் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னனி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இராஜகம்பள சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடி உத்தரவு பிறப்பித்து, தொடர்ந்து கடைபிடித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் அவர்களுக்கும், கழக முன்னோடிகளுக்கும் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved