🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சை பெருவேந்தனின் 224-வது வீரவணக்கநாள் எழுச்சி!

வங்கத்தில் வாகை சூடி இந்தியாவை வளைக்க  தென்திசை நோக்கிப் புறப்பட்ட பரங்கியரின் பீரங்கிக்கு சமஸ்தானங்கள் பல சரணாகதி அடைந்துவிட்ட போது, தென்கோடி பாஞ்சையிலே கோட்டை கொத்தளம் அமைத்து வீற்றிருந்த பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். தென்திசை பாளையக்காரர்களின் பராக்கிரமத்தில் பாதியை வடதிசை வேந்தர்கள் காட்டியிருந்தால் ஆங்கிலேயர்களுக்கு நாடுபிடிக்கும் ஆசையே போயிருக்கும். 50-60 கிராமங்களை கட்டியாண்ட பாளையக்காரகள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உக்கிரமாக போராடியதுபோல் வடதிசையிலாண்ட சிற்றரசர்களும், மன்னர்களும் ஆங்கிலேயர்களின் ஆசை வார்த்தைக்கு இணங்கி தன்மானத்தை இழந்து, தன் மக்களையும் அடிமைகளாக்கினர்.

ஆனால் அதற்கும் நேர்மாறாக, தென்கோடி பாளையக்காரர்கள் குறிப்பாக பாளையங்களின் பெரும்பகுதியை ஆட்சிசெய்த கம்பளத்து பாளையக்காரர்களின் உறுதியும், அணிதிரட்டலும் ஆங்கிலேயர்களை நடு நடுங்கச் செய்தது. அதனால் எதிர்த்தவர்களை தூக்கிலிட்டும், சிறையிலிட்டு சித்திரவதை செய்தும் மற்றவர்களுக்கு அச்சமூட்டினான். ஆனால் சூரியன் அஸ்தமனிக்காத சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய வெள்ளையன் அஞ்சியது மாவீரன் கட்டபொம்மன் வீரத்திற்குத் தான். முதலில் கட்டபொம்மனை வீழ்த்தினால் மட்டுமே முழுமையான தென்இந்தியாவை வெற்றிகொள்ளமுடியும் என்றுணர்ந்த பரங்கியர்கள், பாஞ்சை வேந்தனுக்கு தூதனுப்பி, பின் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று. அம்மாவீரனின் 224-வது நினைவு நாளில் மாமன்னரை நினைவு கொண்டு, வீழ்ந்த சமுதாயத்தை எழுச்சி கொள்ள உறுதி ஏற்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved