🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் கட்டபொம்மனுக்கு தலைவணங்கியே தீரவேண்டும்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை தலைநகர் சென்னையில் அமைக்கப்பட வேண்டுமென்பது கம்பளத்தாரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. சமுதாயத்தில் தலைவர்களுக்குள்ளும், அமைப்புகளுக்குள்ளும் பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றிணையும் ஒரு மையப்பொருளாக இருந்தது கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வேண்டுமென்பதே.

மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஒருவழியாக 2021 சட்டமன்றத் தேர்தல் மூலம் ஒரு விடிவுகாலம் பிறந்தது. பத்தாண்டுகாலம் ஆட்சியையும், ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி அவர்களையும் இழந்திருந்த திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு சமுதாயங்களின் கோரிக்கையை நாடிபிடித்து பார்த்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கடவுளே நேரில் வந்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டால், ஒவ்வொரு கம்பளத்தானும் கேட்கும் ஒரே வரம் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே என்பதாகத்தான் இருக்க முடியும். இதுமட்டுமல்ல, கட்டபொம்மன் என்பது வெறும் பெயர்ச்செல்லல்ல, ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தின் வினைச்சொல்லாக போலி தமிழ்தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டே மிகப்பெரிய பிம்பம் வளர்த்தெடுக்கட்டு விட்டது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட திமுக கட்டபொம்மனுக்கு சிலைவைப்பதின் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு மக்களையும் தனது பக்கம் திருப்பமுடியும் என்று திட்டமிட்டு தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட்டது. 

எதிர்பார்த்ததுபோலவே கம்பளத்தாரின் வாக்குகள் மட்டுமல்ல தெலுங்கு மக்களின் பேராதரவோடு ஆட்சியை பிடித்த திமுக, வாக்குறுதியளித்தபடி தலைநகர் சென்னையில் சிலைவைத்து, தமிழக முதல்வரால் திறந்தும் வைக்கப்பட்டது. 

கட்டபொம்மன் சிலை பிரதான சாலைகளில் ஒன்றில் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, காந்தி மண்டப வளாகத்தில் சிலை வைத்ததில் ஒரு சிறு அதிருப்தி நிலவினாலும், சிலைக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தகுதியான, மிகச்சிறந்த இடம் என்று நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக, கட்டபொம்மனாரின் வீரத்திற்கு தலைவணங்கி ரஷ்ய நாட்டு தூதர், நடிகர்கள் ராஜேஷ், S.V.சேகர், பப்லு ப்ரிதிவிராஜ், ஸ்டண்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம், நடிகர் கராத்தே ராஜா, நடிகர் போண்டா மணி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஜிபி பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஹண்டே, காங்கிரஸ் கட்சி இதயத்துல்லா, ரெட்டிகள் நலச்சங்க தலைவர் நாகேந்திரன் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தியதோடு, சிலையருகே நீண்ட நேரம் நின்றிருந்து உணர்வு பெறுக்கோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், வந்திருந்தவர்களோடு நலம் விசாரித்துக்கொண்டும், ஆர அமர்ந்து பேசிவிட்டு சென்றனர்.   

இது நாம் எதிர்பார்த்ததுபோல் பிரதான சாலையின் மையத்தில் வைத்திருந்தால், நிகழ்ச்சி முழுக்க வெறும் சடங்குபோல் நடந்து முடிந்திருக்கும். அந்த வகையில் காலம் கடந்தாவது தியாகத்தால் உயர்ந்த மாவீரன் கட்டபொம்மனுக்கு வீரசக்கதேவி சரியான இடத்தை அமைத்துக்கொடுத்தாள் என்றுதான் கூற வேண்டும்.

சிலை அமைத்துக்கொடுத்த திமுக மாவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் உரிய அக்கரை காட்டவில்லை என்ற மனக்குறை இருந்தாலும், காந்தி மண்டபத்தில் சிலை அமைத்துக்கொடுத்ததற்கு மாண்புமிகு தமிழக முதல்வரை நன்றியோடு நினைவுகூர்வதில் கம்பளத்தாரின் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம். 

நினைவுநாள் நிகழ்ச்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படாவிட்டாலும் கூட, கட்டபொம்மன் என்ற ஈர்ப்புவிசை அனைவரையும் காந்தி மண்டபம் நோக்கி ஈர்க்கிறது என்பதற்கு நேற்றைய நிகழ்வுகளே சான்று. இது ஆண்டுக்காண்டு வலுப்பெற்று, யார் ஆட்சியாளர்களாக வந்தாலும், இருந்தாலும் காந்தி மண்டம் வந்து கட்டபொம்மனை வணங்கியே தீரவேண்டும் என்றநாள் வருவதற்கு நீண்ட காலம் ஆகப்போவதில்லை என்பதை நாளைய வரலாறு உணர்த்தும்.  

வீரவணக்க நாள் நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் கம்பளத்தாரின் நெஞ்சார்ந்த நன்றி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved