🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவையில் கம்பளத்தாரின் வள்ளிக்கும்மி அரங்கேற்றம்!

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் சார்பில் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவந்த வள்ளிக்கும்மி நடனத்தின் அரங்கேற்றம் நேற்று (29.10.2023) சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்த விவரம் வருமாறு, 

கொங்கு மண்டலத்தின் பாரம்பரியக் கலையான வள்ளிக்கும்மி ஆட்டம் சமீபகாலமாக கொங்கு கிராமங்களில் புத்துயிர் பெறத்தொடங்கியுள்ளது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது. அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,  கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வள்ளிக்கும்மியாட்டம் மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கொங்கு மண்டலத்திலுள்ள பெரும் பணக்காரர்களும், பெரு நிறுவனங்களும் பணத்தை வாரியிரைத்து நிகழ்ச்சிகளை போட்டிபோட்டு ஏற்பாடு செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் "வள்ளிக்கும்மி போஃபியா" தொற்றிக்கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண்களும், பெண்களுமாக வள்ளிக்கும்மி ஆடுவதை பெருமிதத்தோடு பேசிவருகின்றனர்.

இதன் தாக்கம் கம்பளத்தார்களையும் விட்டு வைக்கவில்லை. கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இராஜகம்பளத்தார் சமூகத்தினரோடு இணைந்து ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பல்வேறு சமுதாய பெண்களும் வள்ளிக்கும்மி ஆட்டத்தை கடந்த ஒருமாதமாக நடத்திவந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று (29.10.2023) அரங்கேற்றம் நடைபெற்றது. மாலையில் தொடங்கிய கும்மியாட்டம் முன்னிரவு வரை நீண்டது. 

இதில் ஈச்சனாரி ஊர்நாயக்கர், தொழிலதிபர் முத்துசாமி, ஈச்சனாரி மகாலிங்கம் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார் மற்றும் கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கான செலவுகளை பொதுமக்களோடு இணைந்து முத்துச்சாமி, மகாலிங்கம் ஆகியோர் பெருமளவு ஏற்றிருந்தனர். காவல்துறை உயர் அதிகாரி கிருஷ்ணன் சார்பில் ஏழை,எளிய குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved