🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெரிந்த விளையாட்டின் தெரியாத பக்கங்கள்!

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரம் உச்சத்தில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள ஒரு விஷயம் கிரிக்கெட். பார்வையாளர்கள் அனைவருக்கும் இந்த விளையாட்டின் சட்ட, திட்டங்கள் தெரியாவிட்டாலும் அடிப்படை சில விசயங்களை தெரிந்து வைத்திருப்பர். ஆனால் அதிகம் பேசப்படாத விசயம் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் ஆடுகளத்தின் பக்கத்தை மாற்றுவது ஏன் என்பது பற்றி. அதைத்தான் இந்தப்பகுதி பேசப்போகிறது.

கிரிக்கெட்டில் ஏன் ஒவ்வொரு ஓவர் முடிந்த பிறகும் ஃபீல்டிங் டீம் முந்தைய ஓவர் போடப்பட்ட பக்கத்திற்கு நேர்மாறாக மற்றொரு பக்கத்தில் இருந்து பந்து வீசுகின்றனர்? 

பொதுவாக தொலைக்காட்சியில் மேட்ச் பார்க்கும் நமக்கு ஒவ்வொரு ஓவர் முடிவிலும் விக்கெட் கீப்பர் உட்பட ஃபீல்டிங் அணியினர் முதல் ஓவர் வீசப்பட்ட பக்கத்தில் இருந்து மாறி அதற்கு நேர்மாறான மற்றொரு பக்கத்துக்கு மாறுவது காட்டப்படாது. 

உண்மையில் நாம் பார்க்கும் விளம்பர இடைவெளியில் நடப்பது இது தான். 

அதற்கு எடுத்துக் கொள்ளும் சில முதல் பல நொடி இடைவெளியில் தான் நமக்கு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. 

எதற்காக இவ்வாறு ஒவ்வொரு ஓவர் முடிவிலும் பவுலர்கள் வேறொரு பக்கத்தில் இருந்து பந்து வீசுகிறார்கள்? 

இதற்கான காரணங்கள் இதோ....

முதலில் "பிட்ச்" ( ஆடுகளம்) :

ஒரு பக்கமாக மட்டுமே பந்து வீசப்பட்டு ஒரு பக்கம் மட்டுமே பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தால் அந்த பக்கம் உள்ள பிட்ச் விரைவில் சேதமாகி அடுத்த இன்னிங்க்ஸ் ஆடுபவர்களுக்கு பிரச்சனையாக அமையும். பிட்ச்சின் இருபுறமும் ஒரே மாதிரி சரிசமமாக பயன்படுத்தப்படுமாயின் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். 

பிட்ச்சில் ஒரு புறம் வெடிப்புகள் இருக்கும் மற்றொரு புறம் இல்லாமல் இருக்கலாம். பிட்ச்சின் ஒரு புறம் காய்ந்து சருகாகிய புல் இருந்து மற்றொரு புறம் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய அம்சங்கள் பவுலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் அமையும். எனவே இருபுறமும் மாற்றி மாற்றி உபோயகிப்பதால் இருபக்கமும் சமநிலையைப் பேண முடியும்.

இரண்டாவது மைதானம்: 

மைதானத்தின் நீள அகலம் மற்றும் காற்று வீசும் தன்மை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் சரிசமமான விட்டத்தைக் கொண்டு இருப்பதில்லை.

பிட்ச்சின் ஒரு புறத்தில் இருந்து லாங் ஆன் பவுண்டரி 70 மீட்டர் இருந்தால் மற்றொரு புறத்தில் 60 மீட்டர் தான் இருக்கும். பிட்ச்சின் ஒரு பக்கத்தில் ஸ்கொயர் லெக் பவுண்டரி 65 மீட்டர் என்றால் மற்றொரு பக்கத்தில் 70 மீட்டர் இருக்கும். 

இத்தகைய வேறுபாடுகள் இருப்பதால் ஒரே பக்கத்தில் இருந்து பவுலிங்  செய்யாமல் மாற்றிக் கொண்டே இருப்பது ஆடுகளத்தின் சீரற்ற தன்மையால் ஒரு அணிக்கு மட்டும் சாதமாக அமைந்து விடுவதை தடுக்கிறது.

கடற்கரையை ஒட்டி இருக்கும் ஸ்டேடியங்களில் குறிப்பாக திறந்தவெளி ஸ்டேடியங்களில் காற்று வீசும் தன்மை ஒரு பக்கமாக பந்துக்கு இன்னும் வேகம் கூட்டும். இதனால் ஃபாஸ்ட் பவுலர்கள் சாதகம் அடைவார்கள். பந்து இன்னும் கூடுதல் ஸ்விங் ஆகும். இதை தவிர்க்க ஓவருக்கு ஓவர் திசை மாறி வீசும் போது பேட்ஸ்மென்களுக்கும் சாதகமான தன்மை அமையும். 

 மூன்றாவது "பார்வையாளர்கள்":

கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆடும் போது ஒரு பகுதியில் மட்டும் நின்று முழு மேட்ச்சையும் ஆடினால் 

அவருக்கு பின்பக்க திசையில் இருக்கை அமைந்தவருக்கு மேட்ச் முழுவதும் அவரது முன் பக்க பார்வை கிடைக்காது. இதை தவிர்க்க பவுலர் திசை மாறும் போது ஒரு ஓவர் விட்டு ஒரு ஓவர் பேட்ஸ்மேனின் நேரடி பார்வை அனைத்து பார்வையாளர்களுக்கும் கிட்டும். 

இத்தகைய காரணங்களால் ஓவருக்கு ஓவர் பந்து வீசும் அணியினர் தங்களது பந்து வீசும் புறத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

நன்றி
Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved