🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீடா? - நெருப்போடு விளையாடாதீர் முதல்வரே!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது 2021 பிப்ரவரி 26ந் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணிநேரம் முன்பாக சட்டம் இயற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதோடு, தொட்டிய நாயக்கர் சமூகம் அங்கம் வகிக்கும் சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட  25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது பின்னர் அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவசர சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியிருந்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமைதியாக வாழும் வன்னியர் சமுதாய மக்களைத் தூண்டி கூட்டணி பேர வலிமையைக் கூட்ட நினைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் இவ்விவகாரம் குறித்து அண்மையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார்.

பாமக-வின் தேர்தல் நாடகத்தை புரிந்துகொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு வன்னியர் இடஒதுக்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாயின. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுகவும் பாமகவும் ஆடும் இந்த ஆடுபுலி ஆட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியரல்லாத சாதியினரை பலிகடா ஆக்கிட வேண்டாம் என்று சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அதன் செயல்தலைவர் பி.இராமராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவி பேராசையால் 115 சாதிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு வன்னியர் ஒருசாதிக்கு மட்டும் வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு சட்டம் உச்சநீதிமன்றத்தால் குப்பையில் தூக்கியெறியப்பட்டது. கோடிகணக்கான மக்களின் உரிமைகளை ஒருசாதிக்கு மட்டும் வாரிக்கொடுத்து சமூகத்தை பிளவுபடுத்தி தேர்தல் வாகைசூட முயன்றவர்களை தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். அந்த பச்சைத்துரோகத்தை மன்னிக்கத் தெரியாத மக்கள் தங்கள் கோபத்தை ஒருசில தினங்களுக்கு முன் பசும்பொன்னில் காட்டியதை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. எனவே பாமக நடத்தும் நாடகத்திற்கு தமிழக அரசு துணைபோகாமல் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும்.  மாறாக, முந்தைய ஆட்சியாளர்கள் செய்த அதேதவறை தற்போதைய முதல்வரும் செய்து கோடிக்கணக்கான மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved