இந்தியா இன்னும் விவசாய நாடா? எதை நோக்கி நகர்கிறது உலகம்?

விவசாய நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா மெல்ல மெல்ல மாறி தொழில்துறையை நோக்கி அதிகம் பேர் நகர்வது வேகமாகிவருகிறது. இதனால் நம் நாட்டில் அதிகம் பேர் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது விவசாயத்திலா, தொழில்துறையிலா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
15 வயது நிரம்பியவர்கள் உழைக்க தகுதி படைத்தவர்கள் என்று நாம் கொள்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விகிதாச்சாரம் 50-50 என்று இருந்தது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் தொழில்துறையில் 65% மக்கள் உழைப்பாளிகளாக இருக்கின்றனர். நம் நாட்டில் 50-50 சதவிகிதம் ஐந்தாண்டுகளில் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.,விவசாயத்திலிருந்து உற்பத்தித்துறைக்கு ஏழு சதவீதம் மக்கள் இடம் பெயர்ந்து இருக்கின்றனர்.
கட்டுமானத்துறையில் 13% உழைப்பாளி மக்களும், 11% உற்பத்தி துறையிலும் ஈடுபட்டு இருக்கின்றனர். உற்பத்தித் துறைக்கு உழைப்பு இடம்பெயர்வது பணி நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் என்று கருதி விடக்கூடாது.
75% தொழிலாளர்கள் தனி உரிமையாளர்கள் (Sole Proprietor) மற்றும் ஓரிரு பங்குதாரர்கள் (Partnership Firm) எனும் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 60% தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்த கடிதமே கிடையாது. 54% தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், பிஎஃப் இஎஸ்ஐ இன்சூரன்ஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை போன்ற சமூகப் பாதுகாப்புகள் அறவே கிடையாது. ஆயுஷ்மான் யோஜனா, பிரதமர் ஜீவன் ஜோதி திட்டம் போன்றவை இவர்களைச் சென்றடையவில்லை.
இந்தியா விவசாய நாடா,தொழில் வளர்ச்சி நாடா? என்ற கேள்விக்கு விவசாயத்திலிருந்து தொழில் துறைக்கு மெல்ல முன்னேறி வருகிற நாடு என்று விடை சொன்னாலும், விவசாயக் கூலிகளுக்கும் ஜிக் (Gig Workers) தொழிலாளர்களுக்கும் கண்கூடாக தெரியும் மாற்றங்கள் இல்லை.
ஆன்லைன் தளங்கள் வழியே வாடிக்கையாளர்களை இணைக்க கூடிய சேவையை, முழு நேர பணியாளர்களுக்கு மாற்றாக, தற்காலிகமாக அல்லது பகுதி நேரமாக வேலைக்கு அமர்த்தப்படுவோர் கிக் தொழிலாளர்கள் (Gig workers) என அழைக்கின்றனர். கிக்ஸ் என்ற வார்த்தை, இசை உலகத்தில் இருந்து வந்தது.
கிக் தொழிலாளர்கள் தாங்கள் சுதந்திரமாக எப்போது விரும்புகிறார்களோ, அப்போது பணிபுரியலாம். அதேநேரம் பணி பாதுகாப்பு என்பது இருக்காது. இதில் விடுமுறை சம்பளம், காப்பீடு போன்ற விஷயங்களில் நிறுவனங்கள் பணத்தை சேமிக்கின்றன. சில நிறுவனங்கள், கிக் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு திட்டங்களை அளிக்கின்றன.
கிக் பொருளாதாரம், அதிக எண்ணிக்கையிலான மக்கள், பகுதிநேரமாகவோ, தற்காலிகமாகவோ, சுதந்திரமான ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாகும். கிக் பொருளாதாரத்தால், செலவு குறைவதுடன், திறமையாக வேலையை முடிக்க இயலும். ஸ்விகி, ஸொமேட்டோ, ஊபர், ஃபிளிப்கார்ட் டெலிவரி போன்றவை இதற்கு உதாரணமாகும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்களில் பண்ணையடிமை முறை நிலவுவதை பார்க்கின்றோம். வருங்காலங்களில் வலுவான தொழிற்சங்கங்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி: ஆறுக்குட்டி