பனிக்கண்டத்து மனிதர்கள் எஸ்கிமோக்களின் விசித்திர வாழ்க்கை!

ஆர்டிக், அண்டார்டிகா இரண்டுமே பனிக் கண்டங்கள்தான். இருந்தாலும் ஆர்டிக் எனப்படும் வடதுருவ பகுதியில்தான் எஸ்கிமோக்கள் வாழ்கிறார்கள். அண்டார்டிகா மனிதர்கள் வாழ முடியாத பனிக் கண்டம் என்பதால் அங்கு இவர்கள் கிடையாது.
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian) மொழியி லிருந்து உருவானது. இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea), அலாஸ்காவின் ஓரம், கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர்.
நம்மிடையே சாதி வேறுபாடு உள்ளதை போல எஸ்கிமோக்களில் இன்னூட் (Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு. இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிறக் கண்களும், அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது.எஸ்கிமோக்களின் வாழ்க்கை சுமையான ஒன்று. நம்மைப் போன்று வித விதமான உணவு வகைகளை உண்டு வாழ அவர்களால் முடியாது. பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு, வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர். தான் வாழும் இடங்களில் சீல், மீன் போன்றவை கிடைக்காவிட்டால் அந்த இடத்திலிருந்து குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு போவார்கள். இதனால் எஸ்கிமோக்களுக்கு பனி பிரதேசத்தில் நிரந்தர வீடுகள் கிடையாது. எஸ்கிமோக்கள் தங்களை குளிரினின்றும் பாதுகாத்துக் கொள்ள சீல், துருவ கரடி, துருவ நரி போன்ற பிராணிகளின் தோலை ஆடையாக்கி அணித்து கொள்கிறார்கள்.
பொதுவாக இவர்கள் குழுவாகவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர். எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர். குழந்தைகளைப் பொக்கிஷமாக கருதுகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. எஸ்கிமோக்கள் வாழும் வீட்டுக்கு "இக்ளு" என்று பெயர். பெரிய பனிக்கட்டிகளை வெட்டி ஒரு பெரிய அரைவட்ட கோளம் போல கட்டப்படும் இந்த வீடு குறுகிய வாசல் போன்ற அமைப்பைக் கொண்டது. . 'இக்ளூ'வைக் கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3-4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். இதில் ஐஸ் படுக்கையின் மேல், முடி உள்ள தோலை விரித்து படுத்து உறங்குவார்கள். வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். இந்த வீட்டுக்குள் "வால்ரஸ்" என்ற மிருகத்தின் கொழுப்பாலான விளக்கு ஒன்று 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும். இது உள்ளே வெப்ப சலனத்தை உண்டாக்கி வீட்டை எப்போதும் கதகதப்பாய் வைத்துக் கொண்டிருக்கும். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிகபட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.
இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகளைப் பயன்படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்; வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும், குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்றுவதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள்.