🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ரஷ்யாவின் நவம்பர் புரட்சி வெற்றிக்குபின் சோவியத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி!

ரஸ்யாவை ஆண்டுவந்த ஜார் மன்னர் பரம்பரையின் ஆட்சிக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சியின் 106 ஆம் ஆண்டு நினைவுநாள். இளம் சோவியத் ரஸ்யாவை கட்ட நினைத்த லெனினுக்கு ஜெர்மனியின் சவாலும், அதை சமயோதிகமாக அவர் கையாண்ட விதமும் ஒரு படிப்பினை. அப்படி என்ன நடந்தது ரஸ்யாவில்...

சோவியத் புரட்சி வெற்றி பெற்ற போது ரஷ்யாவும் ஜெர்மனியும் யுத்தம் செய்து கொண்டு இருந்தன..

இரண்டு நாடுகளுடைய எல்லையில்  இருந்த பிரஸ்ட்-லிட்விக்-லித்துவேனியா என்கிற சிறு பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தான் யுத்தத்திற்கான காரணம்.

அந்த யுத்ததை தற்காலிகமாக  நிறுத்தாவிடில்  சோவியத் யூனியனை நிர்மாணிப்பது கடும் சிரமம் என்று லெனின் உணர்ந்து இருந்தார்.

அதனால் பிரெஸ்ட்-லிட்விக்-லித்துவேனியா பிரதேசத்தை ஜெர்மனிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு நஷ்ட ஈடும் தந்துவிட்டு  தற்காலிக போர்நிறுத்தம் செய்து கொள்ள லெனின் தயாராக இருந்தார்.

அதற்காக ஜெர்மனின் சக்ரவர்த்தி கெய்சுருடன் பேச்சு வார்த்தை நடத்த டிராட்ஸ்கியை பெர்லினுக்கு அனுப்பினார்.

ஒரு வாரமாகியும் டிராட்ஸ்கியிடமிருந்து ஒரு தகவலுமில்லை.

யுத்தம் முன்னிலும் உக்கிரமாக நடந்தபடி இருந்தது.இருதரப்பில் உயிர்பலியும் அதிகரித்து வந்தது. இளம் சோவியத் யூனியன் தன் சக்தி -பணம்-நேரம் முழுவதையும் அந்த யுத்ததிற்கு செலவிட வேண்டி இருந்தது.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியாளர்கள் புரட்சியை வீழ்த்த முழுமூச்சில் முயற்சி செய்தார்கள்.

"இளம் சோவியத் யூனியனின் எதிர்காலம்" பற்றிய கவலை லெனினைப் பிடித்துக் கொண்டது.

கடும் பிரயத்தனப்பட்டு பெர்லினில் இருந்த டிராட்ஸ்கியை லெனின் தொடர்பு  கொண்டபோது "கெய்சர் சக்ரவர்த்தியைப் பார்க்க வேண்டும் என்றால் ஒரு பிரத்யேக தனி அங்கி(GOWN)அணிய வேண்டும் என்கிறார்கள்.

அவர் முன் மண்டியிட்டு அவர் கையை முத்தமிட வேண்டும் என்கிறார்கள். புரட்சிக்காரனாகிய நான் அந்த நிபந்தனைகளை எப்படி ஏற்க முடியும்.? அதனால்தான் கெய்சரை சந்திக்கவில்லை" என்று டிராட்ஸ்கி சொன்னதாகக் கேள்விப்பட்டதும் லெனின் கடும் எரிச்சல்  அடைந்தார். 

அப்போதுதான் "தோழர் டிராட்ஸ்கி நீங்கள் என்ன அங்கி உடுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

இளம் சோவியத் யூனியன் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல முனைகளில் போராடி நம்மை நாமே அழித்துக் கொள்ள முடியாது. அதனால் கெய்சர் உங்களை பாவாடை அணிந்து வரச் சொன்னால் பாவாடை அணிந்து கொண்டுபோங்கள்.இது டிராட்ஸ்கி என்ற தனி ஒரு புரட்சியாளன் பிரச்சனை அல்ல. இளம் சோவியத் யூனியனை காப்பாற்றும் பிரச்சனை " என்று லெனின் தந்தி அடித்தார்.

"பாவாடை கட்டி வரச் சொன்னால் பாவாடை கட்டிக் கொண்டு போ" என்று லெனின் அடித்த தந்தி உலகப் பிரசித்தி  பெற்ற தந்தி.

அதன்பின் டிராட்ஸ்கி கெய்சரை சந்தித்ததும் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதும் பிரஸ்ட்-லிட்விக்-லித்வேனியா பிரதேசத்தை ஆறேமாதத்தில் லெனின் வென்று எடுத்துக் கொண்டதும் வரலாறு. 

புரட்சிகளின் கமாண்டர்-இன்-சீப் என்று போற்றப்படும் தோழர் லெனினுக்கு, எப்போது ஆயுதம் தாங்கிய எழுச்சி நடத்த வேண்டும், எப்போது எதிர்புரட்சியாளர்களை தயை தாட்சண்யமின்றி ஒடுக்க வேண்டும், எப்போது எதிரியோடு சமரசம் செய்து கொண்டு தேச நிர்மாணப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது அத்துப்படி.

"புரட்சி செய்வது ஒரு கலை" என்று சொன்ன அவர் ஈடிணையில்லாத புரட்சியாளர். அவருக்கு நிகர் அவரே.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved