🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு!

இந்தியாவில் பெரும்பான்மையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் சட்டப் பிரிவு 340 இல் தெளிவாக்கப்பட்டது.1953 ஜனவரி 29 இல் காகா காலேகர் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2399 சாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்த்தது. 1979-இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமித்தார் அன்றைய பிரதமர் மோராஜி தேசாய். இந்த மண்டல் ஆணையம் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மற்றும் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஆயுட்காலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதோடு காலாவதி ஆகிவிடுவதால், 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட இந்திராசஹானி வழக்கில் 1992-இல் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தேசிய அளவில் ஒரு ஆணையமும், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான் தேசியப் பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் ஆகும்.

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 விதிகளின் படி தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (National Commission for Backward Classes) 1993 ஆம் ஆண்டில் ஆகத்து 14 ஆம் நாளில் உருவாக்கப்பட்டது. எனினும் அது செயல்வடிவம் பெறாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் 2017 அக்டோபர் 2 ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் இந்திய அரசியலமைப்பின் 340 வது பிரிவின் கீழ் ஆணையம் உருவாக்கப்பட்டது. 2018 ஆகஸ்டில் 102 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் அரசியலமைப்பில் 338B பிரிவைச் சேர்ப்பது ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது. இதன் மூலம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டு செயல்படத்தொடங்கியது. 

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கிய வகுப்பினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும் பிழையாகச் சேர்க்கப் பட்டதாகப் புகார்கள் வந்தால் விசாரித்து அவ்வகுப்பினரை நீக்குவதும் தாம் இந்த ஆணையத்தின் பணிகள். இது வரை 2418 சாதியினரை பட்டியலில் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து காலியாக உள்ளதால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் கூறி, பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவருமான கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த அக்.12 இல் விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த மத்திய அரசு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த ஓராண்டாக ஆணையம் செயல்படவில்லை என்றும், ஆணையத்துக்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விசாரணையை 2024 ஜனவரி மாதம் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கான குரல் தேசிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முழு வீச்சில் செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே 10 முதல் 15 சதவீதமே உள்ள உயர்சாதி பிரிவில், ஏழைகளுக்கு மட்டும் 10% இடஒதுக்கீடு வழங்க அவசரம் காட்டிய மத்திய அரசு நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமுள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலனில் கிஞ்சித்தும் அக்கறையின்றி உறுப்பினர்கள் நியமனத்தில் கூட காலதாமதம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவ இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசு தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. மத்திய அரசின் இந்தப்போக்கு மாறாவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று ஓபிசி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved