🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்திய அரசின் பத்ம விருதுக்குரியோரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? யாருக்கெல்லாம் கொடுக்கிறார்கள்?

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு ஆளுமைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக ஏன் அவர்களுடைய அனுமதியைக் கேட்கிறார்கள் என்கிற விஷயங்களும், பத்ம விருதுகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன? என்ற விஷயங்களை ஒரு குடிமகனாக நாம் அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம்.

 விருதுகளுக்கான வரலாறு என்ன?

ராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதைப் போல குடிமக்களுக்கும் (சிவிலியன்கள்) அவரவர் துறையில் காட்டும் ஈடுபாட்டுக்காகவும் சிறப்பான சேவைக்காகவும் வழங்கவே பத்ம விருதுகள் 1954-ல் நிறுவப்பட்டன.  பத்ம விபூஷண் பெஹலா வர்க் (முதலாவது தரம்), தூஸ்ரா வர்க் (இரண்டாவது தரம்), தீஸ்ரா வர்க் (மூன்றாவது தரம்) என்று இந்த விருதுகள் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டன. இது விருதாளர்கள் மத்தியில் ஒரு சங்கடத்தை உருவாக்கியதால் விரைவிலேயே பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என்று பெயர்களை  மாற்றிவிட்டார்கள். பொது வாழ்வில் கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வியாபாரம், தொழில்துறை, மருத்தவம், இலக்கியம், கல்வி, சுகாதாரம், கலை என்று பல்வேறு துறைகள் வாரியாக 1955 முதல் வழங்குகின்றனர்.

விருதுக்கு யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

விருதுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண்டுதோறும் தேர்வுக் குழுவை நியமிக்கிறார் பிரதமர். மத்திய அமைச்சரவைச் செயலர்தான் இந்தக் குழுவின் தலைவர். உள்துறைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு அல்லது ஆறு பிரமுகர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இவர்களுடைய பெயர்கள் வெளியே  தெரிவிக்கப்படாது. 

 யார் பரிந்துரைக்கலாம்?

விருதுக்குரியவரைத் தனி நபர்கள் உள்பட எவர் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். மற்றவர்கள்தான் பரிந்துரைக்க வேண்டும் என்று காத்திருக்காமல் நாமே கூட நம்மைப் பற்றி (உண்மையாக) 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம். ஆண்டுதோறும் மே 1 முதல் செப்டம்பர் 15 வரையில் இத்தகைய விண்ணப்பங்கள் பெறப்படும். மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள்கூடப் பரிந்துரைகளை அனுப்பலாம். ஆனால், தகுதி தொடர்பில் இந்தக் குழு ஆராயும். குறிப்பிட்ட துறையில் ஆற்றியிருக்கும் பங்களிப்பை மட்டும் அல்லாது, சம்பந்தப்பட்டவர் குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள், வதந்திகள், வழக்குகள் உண்டா என்றும் காவல் துறை மூலம் விசாரிப்பார்கள். அதன் பின்னரே முடிவெடுப்பார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடைமுறை?

இதற்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டால், விருதாளர்களின் பட்டியல், பிரதமரிடம் தரப்படும். அவர் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். அவருடைய ஒப்புதலும் கிடைத்த பிறகு, வாய்மொழியாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்புதலையும் பெற்றுவிட்டு, அதன் பிறகே குடியரசு தினத்துக்கு முதல் நாள் விருது அறிவிக்கப்படும். ‘எனக்கு விருது வேண்டாம்’ என்று ஒருவர் மறுத்துவிட்டால் அவருடைய பெயரைப் பட்டியலிலேயே சேர்க்க மாட்டார்கள். குடியரசுத் தலைவர்கள் மாளிகை அறிவிப்பை வெளியிட்ட பிறகு இந்த விருதை மறுப்பதற்கு இடம் தரும் விதி ஏதும் இல்லை.

இந்த விருதினால் என்ன பலன்?

இந்த விருதுகளின்போது சான்றிதழும் கழுத்தில் அணியும் வகையில் பதக்கமும் தரப்படும். பதக்கத்தைப் போன்ற சிறிய வடிவிலான நினைவுச் சின்னமும் தரப்படும். சான்றிதழில், எந்தத் துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது என்பது குறிப்பிடப்பட்டு குடியரசுத் தலைவரின் கையொப்பமிடப்பட்டிருக்கும். இந்தப் பதக்கத்தை, தேசிய நிகழ்ச்சிகளின்போதும் அரசு விழாக்களின்போதும் விருது பெறுவோர் கழுத்தில் அணிந்துகொள்ளலாம். ஆனால், இந்த விருதைப் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ பட்டம்போல சேர்த்துக்கொள்ளக் கூடாது. அரசு சார்ந்த விஷயங்களில், சமூக அங்கீகாரம், மரியாதை இவையெல்லாம்தான் பலன்கள்.

விருதை ஏற்க மறுத்த வரலாறு உண்டா?

நிறைய உண்டு. மார்க்சிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாடு 1992-ல் விருதை ஏற்க மறுத்துவிட்டார். பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். ஹக்சரும் 1973-ல் பணி ஓய்வுக்குப் பிறகு விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட போது வாங்க மறுத்திருக்கிறார். ராமகிருஷ்ண மிஷன் அமைப்பைச் சேர்ந்த துறவி ரங்கநாதானந்தருக்கு 2000-த்தில் விருது வழங்க சம்மதம் கேட்டபோது, தனிப்பட்ட முறையில் தருவதை ஏற்க முடியாது, இயக்கத்துக்கு வேண்டுமானால் தாருங்கள் என்று கூறினார். வரலாற்று அறிஞர் ரொமீலா தாப்பருக்கு இந்த விருதை வழங்க இரண்டு முறை அரசு விரும்பியும் அவரும் வாங்க மறுத்துவிட்டார்.

ஆனால், இவருடன் இந்த பட்டியல் நிற்காமல் தமிழ் திரைப்பட பாடகி ஜானகி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிதார் கலைஞர் உஸ்தாத் வில்யாத் கான், பாதுகாப்பு ஆய்வாளர் கே. சுப்பிரமணியம், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா, கதக் கலைஞர் சிதாரா தேவி, குஷ்வந்த் சிங் என இந்த பட்டியல் நீள்கிறது. இவர்களுக்கு பல்வேறு காலங்களில் பத்ம விபூஷண் அல்லது பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இதில் கே. சுப்பிரமணியம், 1999இல் விருதுக்கு அறிவிக்கப்பட்டபோது அரசுப்பணி உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் இதுபோன்ற விருதுகளை வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கக் கூடாது. அது அவர்கள் பக்கசார்பாக இருக்க தூண்டலாம் என்ற கருத்தை கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதேபோல் பி.என்.ஹக்சர், இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பிறகு நாட்டின் திட்டக்குழு துணைத் தலைவராகவும் இருந்தவர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அவரது மரணத்துக்கு பின்பு 2014இல் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

கன்னட இலக்கியவாதி கே.சிவராம் கராந்த், 1975இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு 1968இல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை திருப்பிக் கொடுத்தார்.

பொற்கோயில் ஆபரேஷன் ப்ளூர் ஸ்டார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை குஷ்வந்த் சிங் திருப்பிக் கொடுத்தார். ஆனால், 2007இல் அதை விட உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் வழங்கியபோது அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர், தனக்கு இருமுறை வழங்கப்பட்ட பத்ம விருதுகளை நிராகரித்தபொழுது அவர் கூறிய காரணம், "கல்வி அமைப்புகள் மற்றும் அவை தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து மட்டுமே "எனது தொழில்முறை பணிக்கான அங்கீகார விருதை பெறுவேன்" என்று கூறி பத்ம விருதை நிராகரித்தார்.

கதக் கலைஞர் சிதாரா தேவி, தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் இளையோருக்கு பத்மபூஷண் விருது முன்பே கொடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு தனக்கு வழங்கப்படும் விருதை நிராகரிப்பதாக தெரிவித்தார்.

பத்மஸ்ரீ விருதை நிராகரித்தவர்கள் வரிசையில் பிரபல பாலிவுட் வசனகர்த்தா சலீம் கான், எழுத்தாளர் கீதா மேத்தா இடம்பெற்றுள்ளனர். மேலும் 10 பேர் வழங்கப்பட்ட பத்ம விருதை திருப்பிக் கொடுத்தவர்கள்.

உத்தர பிரதேச முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங், இரண்டாம் மொழியாக உருதுவை பேசுபவர்களை கழுதை மீது ஏற்றச் செய்து ஓட விட வேண்டும் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதைத் திருப்பிக் கொடுத்தார் கைஃபி அஸ்மி.

உஸ்தாத் வில்யாத் கானுக்கு 1964இல் பத்மஸ்ரீயும் 1968இல் பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டபோது தமது இசைப்புலமையை தீர்மானிக்கும் தகுதி அதன் நடுவர்களுக்கு இல்லை என்று கூறி விருதை நிராகரித்தார். 2000ஆம் ஆண்டு அவருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது அதை பெறுவது தமக்கு அவமானம் என்று கூறி விருதைப் பெறாமல் தவிர்த்தார்.

மேற்கு வங்கத்தைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா,  மேற்கு வங்கத்தில் முதுபெரும் பாடகி சந்தியா ஆகியோர் தங்களுக்கு பத்ம விருது தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி ஒரு அரசாங்கத்திடம் இருந்து வரும் விருதை ஏற்பதில்லை என்ற முடிவில் தாம் உறுதியுடன் இருப்பதாக புத்ததேவ் தெரிவித்திருந்தார். 80 ஆண்டுகளாக சினிமா உலகில் ஆற்றிய பங்களிப்புக்கு அவரது கடைசி காலத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுவதை தன்னை சிறுமைப்படுத்தும் செயலாக சந்தியா நினைத்ததாக சொல்லப்படுகிறது.

இவர்களுக்கு முன்பே 2013இல் பத்ம பூஷண் விருது திரைப்பட பாடகி எஸ். ஜானகிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என தென் மாநில திரைப்படங்கள் மற்றும் பாலிவுட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஜானகி, தனக்கு அறிவிக்கப்பட்ட விருது காலம் கடந்து கிடைக்கும் கெளரவம் என்று கூறி விருதை ஏற்க முடியாது என்று அறிவித்தார். அந்த விருது அறிவிக்கப்படும்போது ஜானகிக்கு வயது 75.

விருதை நிராகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி, கடந்த, 55 ஆண்டுகளாக, திரைத் துறையில் புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன். ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் மற்ற மொழிகளில் எனது உச்சரிப்பு சரியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கெளரவத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை.

அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை. நான் தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், இந்த விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஜானகி சம்பவத்துக்குப் பிறகே பத்ம விருதுக்கு தகுதி பெறுவோரின் பட்டியலை வெளியிடும் முன்பு, அதை பெற சம்மதமா என வாய்மொழியாக உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பட்டியலை வெளியிடும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இவர்கள் அனைவரும் விருதை பெறாமல் நிராகரிக்க பல்வேறு காரணங்களை கூறியிருந்தாலும், வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் தேர்வில் அரசியல் தாக்கம் இருப்பதாக தொடர்ந்து பலரும் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் மொஹம்மத் ரேலாவுக்கு தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா எம்.பிக்களுமே பத்ம விருதுக்கு பரிந்துரை செய்தபோது அதை இந்த அரசு கண்டுகொள்ளாமல் தவிர்க்க அவர் திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் பணியாற்றியதே காரணம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved