🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாக்குறுதியை நிறைவேற்றத் தயங்கும் தமிழக முதல்வர்!

கரூரில் ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கேட்டு உண்ணாவிரதம்!

பிரிட்டீஷ் ஆட்சிக்கு கட்டுப்பட மறுத்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சமூகங்களின் மீது 1857-இல் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு,  பின்நாட்களில் அவர்கள் மீது கருணைகொண்ட பிரிட்டீஷ் அரசு குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட  சமூகங்களை சீர்மரபு பழங்குடிகளாக (DNT) வகைப்படுத்தி சலுகைகள் வழங்கின. இது சுதந்திர இந்தியா அமைந்த பின்னரும் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதுமுள்ள இச்சமூகங்களுக்கு DNT சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1979-இல் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எம்ஜிஆர் தலைமையிலான அரசு சீர்மரபு பழங்குடிகள் (DNT) என்றழைக்கப்பட்ட இந்த சமூகங்களுக்கு சீர்மரபு வகுப்பினர் (DNC) என்று பெயர் மாற்றம் செய்து சாதிச் சான்றிதழ் வழங்கியது. 

இந்த பெயர் மாற்றம் காரணமாக DNT சமுதாயங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கிவரக்கூடிய பலகோடி மதிப்பிலான திட்டங்கள் எதுவும் 1979-லிருந்து இன்றுவரை தமிழகத்திலுள்ள தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், போயர், ஊராளிக்கவுண்டர், கள்ளர், மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் பட்டியலிலுள்ள 68 சமுதாயங்களுக்கு சென்றடையவில்லை. மத்திய அரசின் பலன்கள் கிடைக்காத காரணத்தால் பிரிடீஷ் ஆட்சியின் காலம்தொட்டு இன்றுவரை இச்சமுதாயங்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

எனவே, மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழகத்திலும் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு  DNT சான்றிதழ்ஞ மீண்டும் வழங்க வேண்டும் என்பது இச்சமூகங்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி 2014 முதல் இச்சமூகங்கள் போராடி வருகின்றன. இதன் பலனாக போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 2019-இல் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு, திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டு DNC/DNT என்று இரட்டை சாதிச்சான்றிதழ் வழங்கியது. இதனை ஏற்க மறுத்த சீர்மரபினர் நலச்சங்கம் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது. எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஏற்கனவே போராடி வரும் சமூகங்களை மேலும் பாதிக்கும் வகையில் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு வழங்கி 20% இடஒதுக்கீட்டில் பெரும்பகுதியை ஒரு சாதிக்கு கொடுத்தது அதிமுக அரசு. 

அதிமுக வின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிமுக-விற்கு எதிராக இருந்ததை 2021 சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திமுக தலைவரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலங்குளம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக வாக்குறுதியளித்தார். 

ஆனால் திமுக ஆட்சியமைந்து 21/2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பலமுறை வலியுறுத்தியும் திமுக  அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. திமுக அரசின் பாராமுகத்தைக் கண்டிக்கும் வகையில் ஒற்றைச் சான்றிதழ் வழங்கக்கோரியும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் கரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் முனுசாமிக்கவுண்டர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி  உள்ளிட்ட நிர்வாகிகளும், விடுதலைக்களம் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், கள்ளர், போயர், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நீடித்தது. திமுக அரசு தொடர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்தால் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று முனுசாமிக்கவுண்டர் தெரிவித்தார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved