🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் புராதான கலைகளை பாதுகாக்க உருவானது தனி அமைப்பு!

ஒரு சமூகத்தின் ஆழமான வரலாற்றை அறிந்துகொள்வதற்கு அந்த சமூகம் பின்பற்றிவரும் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவிலுள்ள சமூகங்கள் அனைத்தும் தனித்தனி சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்து வந்தாலும், தனித்துவமான கலைகளையுடைய சமூகங்கள் மிக மிக சொற்பமே. இன்றைய கர்நாடக, தெலுங்கானா பகுதிகளில் அடர்த்தியாக வாழ்ந்து அரசாட்சி செய்து பின் இன்றைய தமிழக நிலப்பரப்பின் பெரும்பகுதிகளை வென்று ஆட்சி செய்தவர்கள் இராஜகம்பளத்தார் சமூகத்தினர். அந்தவகையில் ஏடறிந்த இந்திய வரலாற்றில் பொதுவுடமை சமூகமாக இருந்த மனிதகுலம் மேய்ச்சல் சமூகமாக பரிணாம வளர்ச்சி பெற்று பின் போர்க்குடி சமூகமாக மாறி அரசுகளை தோற்றுவித்த காலத்தின் கடைசி ஆயிரம் வருட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது இராஜகம்பளத்தார் கட்டமைத்த நாயக்கப்பேரரசு. எனவே மேய்ச்சல் சமூக வாழ்வியலிலிருந்து பேரரசுகளின் காலம்வரை கோலோச்சி இருந்த இராஜகம்பளத்தார்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் வேத மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, தனித்து இயங்கவல்லது.

எனவே இச்சமூகத்தின் பழமையையும், வரலாற்றையும் மேய்ச்சல் சமூக வாழ்விலிருந்து காலம் காலமாக பாடப்பட்டு வரும் சாலி பாடல்கள் மூலம் தெளிவாக விளக்கும். இதனோடு போர்க்குடி சமூக காலத்தில் போரின் வெற்றியை "தேவராட்டம்" ஆடி கொண்டாடத் தொடங்கியவர்களுக்கு, பின் நாட்களில் அதுவே சுக துக்கங்களில் நடத்தப்படும் கலையாக வடிவம் பெற்றது. இந்த மாதிரியான கலைகள் இந்தியாவில் மிகப்பழமையான பழங்குடியினரிடம் மட்டுமே காணப்படுவதிலிருந்து கம்பளத்தார் சமுதாயத்தின் தொன்மையை அறிந்துகொள்ளலாம்.

இப்படி கம்பளத்தாரால் தோற்றுவிக்கப்பட்டு, கம்பளத்தாராலேயே ஆடப்பட்டு வந்த கலை அறிவியல் புரட்சிக்குப்பின் பெரும் அழிவைச்சந்தித்து வந்தது. கடந்த சில பத்தாண்டுகளாக பெரும்பான்மை மக்களால்  கண்டுகொள்ளப்படாமல் இருந்த தேவராட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம். இதுகுறித்து இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பேசும்போது,

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இராஜகம்பளத்தாரின் பாரம்பரியக் கலைகளை மீண்டும் புத்துணர்வாக்கம் பெறச்செய்யும் முயற்சியாக "யதுகுல வம்சம் - இராஜகம்பள கலாச்சார கலைச்சங்கம்" எனும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு கம்பளத்தார் வசிக்கும் கிராமங்கள் தோறும் தேவராட்டம் நடத்தி அக்கலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளது. 

இதன் தொடக்க நிகழ்வாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) மாலை 5 மணியளவில் சமுதாயப் பெரியோர்கள் முன்னிலையில் ஈச்சனாரி தேவராட்டக்குழு வை ஈச்சனாரி ஊர் நாயக்கரும், தொழிலதிபருமான திரு.சி.முத்துச்சாமி B.A.,B.L., தொடங்கி வைத்தார். 

தொடக்கநாள் நிகழ்வில் ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேவராட்டம் ஆடினர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் தர்மப்பிரகாஷ் பாடல் மற்றும் நடனப்பயிற்சி வழங்கியதாக தெரிவித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved