🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலநிலை மாற்றத்தால் பெண்கள் எதிர்நோக்கும் பேராபத்து!

பல்லாயிரம் ஆண்டுகளாக சுரண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டு வரும் பெண்களின் வாழ்க்கை புவிவெப்பமயல் காரணமாக மேலும் அதிக தாக்குதலுக்குள்ளாக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புவிவெப்பமயமாதல் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் இந்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு,

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படப் போவதும் பெண்களாகவே இருக்கின்றனர் என்பதை பல்வேறு பேரிடர்களும், ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றம் பெண்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டிய காலகட்டத்திற்கு உலகம் நகர்ந்துள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு ’பெண்களும் காலநிலையும்’ எனும் தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியும் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் இணைந்து ஒரு நாள் கருத்தரங்கத்தை கடந்த அக்டோபர் மாதம் (10.10.2023) நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் எம்.ஒ.பி.வைணவ மகளிர் கல்லூரியின் தாளாளர் அர்ச்னா பிரசாத் வரவேற்புரையாற்றினார். இந்தியாவின் கிராமப்புறங்கள், விவசாயம், கலாச்சாரம், கலை, வரலாறு குறித்து எழுதி வரும் மூத்த பத்திரிகையாளரான பி. சாய்நாத் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

சாய்நாத் தனது கருத்துரையில் “காலநிலை மாற்றம் என்பதற்குப் பதிலாக புவி வெப்பமயமாதல் எனக் கூறுவதே சரியான சொல்லாடல். புவி வெப்பமயமாதல் எனக் கூறினால்தான் ஏன் வெப்பமாகிறது என்ற கேள்வி எழும். அதற்குக் காரணம் மனிதர்களின் நடவடிக்கை மட்டுமே. மனிதர்கள் முன்னெடுத்த தொழில் நடவடிக்கைககளால் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களால் (பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும், நீராவி, கார்பன்டைஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் மேகங்கள் போன்றவை, பூமியிலிருந்து வெளிப்படும் அகச் சிவப்பு கதிர்களை உள்வாங்கி மீண்டும் வெப்பமாக வெளியிடுகிறது. இதன் மூலம் புவியின் சராசரி வெப்பநிலை பிளஸ் 14 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த நிகழ்விற்குப் பெயர் தான் பசுமைக்குடில் வாயுக்கள்) புவி வெப்பமயமாகிறது. 

இப்படிப் புவி வெப்பமாகும்போது முதலில் நேரடியான பாதிப்பிற்குள்ளாவது தொழிலாளர்களே. அதிலும் பெரும்பான்மையானோர் மகளிரும் இளம் பெண்களும்தான்.  நீங்கள் கடுமையாக உழைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம் எனப்பொதுவாக பொருளாதார நிபுணர்கள் சொல்வதுண்டு.  இக்கருத்து உண்மையெனில், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு உழைக்கும் மகளிரும் கோடீஸ்வரர் ஆகியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே. இம்மகளிரின் கடும் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களே கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்.

இந்தியாவின் கிராமப்புறங்களில், மலைகளில் வசிக்கும் பெண்களின் முதன்மையான வேலை தண்ணீர் எடுப்பது, விறகு சேகரிப்பதுதான். இதற்காக ஒவ்வொரு நாளும் 6 முதல் 8 மணி நேரம் செலவிடுகின்றனர். இப்படியான நிலையில் புவி வெப்பமடைந்தால் வறட்சி ஏற்படும், காடுகளில் உற்பத்தி குறையும். இதனால் பெண்களின் பாடு மேலும் அதிகரிக்கிறது. வறட்சியால் ஏற்படும் உற்பத்திக்குறைவு வறுமையை அதிகரிக்கிறது. 8 முதல் 10 சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் பெயர்களில் நிலம் வைத்துள்ளனர்.

வளங்கள் குறையும்போது பெண்களுக்கு உணவு குறைகிறது. குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு கொடுத்த பின்னரே ஒரு பெண் உணவு உட்கொள்கிறாள். வெப்பம் பெண்களை சுட்டெரிக்கிறது, நாத்து நடுவதும், களை பறிப்பதும், சாண எரு தயாரிப்பதும் பெண்களே. இதற்கான உழைப்பை நாம் கணக்கெடுப்பதில்லை. புவி வெப்பமயமாதலால் இந்த வேலைகள் கடினமாகிறது. சம்பளமின்றி உழைக்கும் மகளிரின் உழைப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் (GDP) வருவதில்லை. புவி வெப்பமயமாதலால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைகிறது. வறட்சியின்போது பெண் பிள்ளைகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கிறது. வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்கு நீண்ட தொலைவு நடக்கும் தன் தாய்க்கு அக்குழந்தை உதவ வேண்டியதுள்ளது. புவி வெப்பமயமாதலால் பெண்களின் வாழ்க்கை, உழைப்பு, உடல்நலம், உணவுத்தேவை என அனைத்தும் பாதிக்கப்படுகிறது” எனக் கூறினார்.


பின்னர் ’காலநிலை மாற்றம் பெண்களுக்கு உண்டாக்கும் சவால்கள்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் திருமிகு. சுப்ரியா சாகு அவர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் அசார் நிறுவனத்தின் மாநில அளவிலான காலநிலை திட்டங்களுக்கான இயக்குனர் திருமிகு. பிரியா பிள்ளை அவர்களும் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலை மூத்த பத்திரிகையாளர் திருமிகு. கவிதா முரளிதரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

சுப்ரியா சாகு பேசுகையில், “நீர்நிலைகள், உப்பங்கழிகள், காடுகள் போன்ற இயற்கை அமைவுகளைப் புவி வெப்பமயமாதலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் அவற்றைச் சார்ந்து இயங்கும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தமிழ் நாடு அரசின் நோக்கம். புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இப்பணிகளின் மூலம் பெண்களின் வருமானத்தை உயர்த்தவும் முயல்கிறோம்” எனக் கூறினார்.

பிரியா பிள்ளை பேசுகையில், “வடக்கு பீகார், மேற்கு வங்கம் பகுதிகளில் புயல், வெள்ளம் தாக்கியபோது அதிகம் இறந்தது பெண்களே. தங்கள் சேலைகளை அவிழ்த்துவிட்டு ஓடி தப்பிக்க முடியாத காரணத்தாலும், நீச்சல் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படாத காரணத்தாலும் அவர்கள் இறந்தனர். பல்வேறு சமூகக் காரணங்களால் ஒடுக்கப்பட்ட பெண்களை மிகவும் எளிதாக, அதிகமாக புவி வெப்பமயமாதலால் தீவிரமடையும் பேரிடர்கள் பாதிக்கின்றன” எனக் கூறினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved