🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சாதியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பாக திருச்சியில் தேசிய நதிநீர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு அவர்களுடைய தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் விவரம் பின்வருமாறு,

வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட சாதியினரை அடக்கி ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட சாதியினருக்கு தமிழகத்தில் 1974 வரை வழங்கப்பட்டு வந்த சீர்மரபு பழங்குடி என்பதை மாற்றி, சீர்மரபு வகுப்பினர் என்று சாதிச்சான்றிதழ் வழங்குவதால், மத்திய அரசின் சலுகைகளை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதியினர் பயன்பெறமுடியாத நிலை இருக்கிறது. எனவே தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளுக்கு DNT ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2014 முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது.


கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது இன்றை தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்தவுடன் டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றாண்டுகள் ஆகியும் தமிழக முதல்வர் 68 சாதிகளுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளார். எனவே தமிழக முதல்வர் இனியும் காலம் தாழ்த்தாது டிஎன்டி ஒற்றைச்சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரியும், டிஎன்டி மக்களின் பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், பீகார்,ஆந்திரா மாநிலங்கள் போன்று  தமிழக அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியும் திருச்சி மாநகர மத்திய ரயில்வே நிலையம் எதிரேயுள்ள வழிவிடு முருகன் கோவில் அருகில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு பழனிசாமி, மு.சரவணன், மணி (விஏஓ), சின்னுசாமி, தங்கவேல், போடி சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சமூக தலைவர்கள் உள்ளிட்ட 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு போராட்ட முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வரும் நாட்களில் மிகப்பெரிய போராட்டங்களை சீர்மரபினர் நலச்சங்கம் முன்னெடுக்கும் எனவும், இது வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved