🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலியுகத்தின் கடைசி கர்ணன் மறைந்தார்! - கண்ணீரில் முழ்கிய இராஜகம்பளத்தார்!

தேமுதிக நிறுவனத் தலைவரும், தமிழக மக்களால் புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த் அவர்கள் நேற்றுக் காலை 06.10 மணியளவில் நுரையீரல் அலர்ச்சியால் மருத்துவமனையில் உயிரழந்தார். இதனையடுத்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தி முடித்தபின், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கேயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 


கேப்டன் விஜயகாந்த் இறப்பு செய்தி காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் சோகம் கவ்வியது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்ட உணர்வோடு கண்ணீர் பெறுக்கோடு போஸ்டர்கள், பேனர்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சாரி சாரியாக சென்னை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு செல்லும் முக்கிய பாதைகள் அனைத்திலும் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல்  போலீசார் திணறி வருவதை ஊடகங்களில் காணமுடிகிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைத்துத்துறை விற்பனர்களும் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவதால் காவல்துறை செய்வதறியாது திகைத்தது. இதற்கிடையே கேப்டன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு கேப்டன் மறைவில் சோகமாய் இருந்த மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாக இருந்தது.


இதற்கிடையே, கேப்டன் முகத்தை இறுதியாக ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பத்தோடு தொடர்ந்து மக்கள் சென்னையை நோக்கி அணிவகுத்து வந்த வண்ணம் இருப்பதால் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த தமிழக அரசு கேப்டன் உடலை மெரினா கடற்கரை எதிரேயுள்ள தீவுத்திடலில் வைக்க ஏற்பாடு செய்தது. இதனை கேப்டன் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு அவரது உடல் கோயம்பேட்டிலிருந்து தீவுத்திடல் கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக கைக்கப்பட்டது. மதியம் ஒருமணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணியளவில் தேமுதிக அலுவலக வளாகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


கேப்டன் விஜயகாந்த் மறைவு இராஜகம்பளத்தார் சமுதாய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. கம்பளத்தார் கிராமம் தோறும் கேப்டன் மறைவுக்கு கலியுகத்தின் கடைசி கர்ணனும் மறைந்தார் என்ற வாசகம் பொருந்திய அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடலுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் இன்று காலை மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved