🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஜனவரி'07 குடும்பவிழாவில் கலந்துகொள்ள திரண்டு வாரீர்-சங்கத்தலைவர் அழைப்பு!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாளைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்கும் வகையில் குடும்பவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை செங்குன்றத்தில் அமைந்துள்ள சங்க அலுவலக வளாகத்தில் நாளை (07.01.2024) ஞாயிற்றுக்கிழமை படுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள வருமாறு சமுதாயத்தினர் அனைவருக்கும் சங்கத்தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜகம்பளத்து சமுதாய உறவுகளுக்கு வணக்கம். நமது மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை கடந்த 03-ஆம் தேதியன்று நாடுமுழுவதும் மிகுந்த எழுச்சியோடும், ஒற்றுமையோடும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் பிறந்தநாள் விழாவானது உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சமுதாய பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், சமுதாய நலன்விரும்பிகள், உறுப்பினர்கள் அனைவரும் பங்குபெற்று ஒற்றுமையை வலுப்படுத்தி, அன்பை வெளிப்படுத்தி, சமுதாய முன்னேற்றத்திற்கு அடுத்தடுத்து செய்ய வேண்டி பணிகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, திட்டங்கள் பல தீட்டி ஒரே எண்ணத்தில் செயல்பட்டுவருவதின் காரணமாக தலைநகர் சென்னையில் சமுதாயத்திற்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளோம்.

இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்கள் அதிகம், அதை உங்கள் ஒத்துழைப்போடு ஒவ்வொன்றாய் இச்சங்கம் சாதித்துக்காட்டும் என்று நம்பிக்கை கொள்வதற்கு சான்றுகள் ஏராளம்.  இந்த தொடர் பயணத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்கள்தம் குடும்பத்தினர், நன்கொடையாளர்கள், சமுதாய பெரியோர்கள், அறிஞர் பெருமக்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி ஆலோசித்து, கருத்துக்களை பரிமாறிக்கொண்டு முன்னோக்கிச்செல்லும் பயணத்திட்டத்தை வரையருப்போம் வாருங்கள் என்று இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் அன்போடு அழைக்கின்றோம். 

இந்தக் குடும்பவிழாவில், இதுவரை சமுதாயத்திற்கு உழைத்திட்ட பெரியோர்கள் நீடூடி வாழ ஆயுஸ்ய ஹோமம் செய்துவிக்கப்படவுள்ள நிகழ்வில் பங்கேற்று இளம் தலைமுறையினர் பெரியோர்களின் ஆசிபெற்று தங்களை சமுதாயப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம். 

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல், தென்தமிழகத்தைப் புரட்டிப்போட்ட பெருமழை போன்ற இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்ட சமுதாய உறவுகள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மிகுந்த ஆரவாரத்தோடு கொண்டாடப்பட வேண்டிய குடும்பவிழாவிற்கு, பெரியோர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்ப இயலாத சூழலை பொறுத்தருளி, என்றென்றும் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள அன்பு உறவுகள் இதையே அழைப்பாக ஏற்று விழாவில் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved