🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அஇஅதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா கடந்த புதன்கிழமை (03.01.2024) அன்று தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளான ஜனவரி 3-ஆம் தேதியன்று ஆண்டுதோறும் கட்சி சார்பில் மாவீரன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துவதற்காக நிரந்தர நிலையாணை பிறப்பித்துள்ள அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் விவரம் வருமாறு,


மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் அதிமுக சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த கடந்த 2022 டிசம்பர் மாதம் நிரந்தர நிலையாணை பிறப்பித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து 2023-ஜனவரி 3 ஆம் தேதி அக்கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல் நினைவுநாளான அக்டோபர் 16 ஆம் தேதியும் தலைமைக்கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில் 2024-ஜனவரி 3-ஆம் தேதி கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை வரவிருப்பதை அடுத்து கழகத்தின் நிலையாணையை சுட்டிக்காட்டி தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொள்வதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு  அதிமுகவின் மூத்த தலைவர் கலாநிதி அவர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்தார்.இதனையடுத்து தலைமைக்கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.இராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தலைமைக்கழக நிர்வாகிகள் 3-ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தலைமைக்கழக நிர்வாகிகளை மூத்த தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர மன்ற உறுப்பினர் சரவணன், விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் அ.காசிராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி உள்ளிட்டோர் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் சிவராஜ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பவுல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதேபோல் கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் செ.தாமோதரன் ஆகியோர் மாலையணிவித்து  மரியாதை செலுத்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved