🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெண்களுக்கு ஜாக்பாட்: மாநில மகளிர் கொள்கை - அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விலையில்லா மகளிர் பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு மாநில மகளிர் வரைவு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதோடு அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வரையறை அறிக்கை தயார் செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.

இந்த மாநில மகளிர் கொள்கையில், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிப்பது,19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம், கல்வி இடைநிற்றல் காரணமாக படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்வது, அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவை மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில மகளிர் கொள்கை தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved