🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனிதனைப் படைத்தவன் கடவுளல்ல, குரங்கினத்தின் பரினாம வளர்ச்சியே -சார்லஸ் டார்வின்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) பிறந்த தினம் இன்று.

1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன.

“மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன” என்ற ‘இயற்கையின் தேர்வில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தார் சார்லஸ் டார்வின்.

அதற்கு முன் நம்பப்பட்டு வந்த கடவுள், படைப்பு, மனித தோற்றம், உயிர்களின் பரிணாமம் குறித்த அனைத்து சித்தாந்தங்களையும் இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கு பின் டார்வினின் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அறிவியல் உலகத்தால் முன்னேற முடியவில்லை.

இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தவர், இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். இவரது தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி, அப்பாவோ மருத்துவர். ஷ்ராஸ்பெரியில் தொடக்கக் கல்வி கற்றார். சிறு வயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம்.

அப்பாவின் ஆலோசனைபடி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இறையியலில் பட்டம் பெற்றார். ஆனால் அவரது கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்துவந்தது. அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

அவர் மூலமாகத் தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காகப் புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். 1831-ல் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம் தொடங்கியது.

அந்தக் கப்பல் உலகையே வலம் வந்தது. பலவகையான இடர்களும், இன்னல்களும் ஏற்பட்டன. ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றில் அரிய வகை உயிரினங்களின் எலும்புகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் சேகரித்தார். உயிரினங்களின் வாழ்க்கையில் இடத்துக்கு இடம் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டார்.

தான் சேகரித்த எலும்புகளைக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார். தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங் களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு உருவானது. மரபு வழி என்பது ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் என்பதைக் கண்டறிந்தார்.

உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் அனைத்து உயிரினங்களும் ஈடுபடுகின்றன என்று அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவித்தார். உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

இவற்றை விளக்கி The Origin of Species by Natural Selection புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. மனிதனின் முன்னோர் குரங்குகள் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.

இதற்கு உலகில் பரவலாக எழுந்த கடும் கண்டனத்துக்கும் கேலிகளுக்கும் இவர் அஞ்சவில்லை. மொத்தம் பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய சிந்தனை இவரால் பிறந்தது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். ஆனால், 1 மகன் மற்றும் இரு மகள்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர்.

இதற்கு காரணம் டார்வின் தனது குழந்தைகளை கண்டுகொள்ளாததும், அவர் மத நம்பிக்கைகளை பின் பற்றாததும் தான் என்று எம்மா நம்பினார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சி போர் நடந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த இறப்புகளால் டார்வினும் மனம் தளர்ந்து போயிருந்தார்.

உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகள் இவருக்குப் பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வழங்கின. உயிரினங்கள் தொடர்பாக அதுவரை நிலவிய சிந்தனைகளைப் புதிய கோணத்தில் மாற்றியமைத்த சார்லஸ் டார்வின் 1882இல் தனது 73ஆம் வயதில் காலமானார்..

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved