🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தண்ணீர் பாட்டில்களில் சூரிய மின் விளக்கு!

அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று. இது சுமார் முப்பது வருடம் முன்னர் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில், விட்டத்தில் தொங்கும் மின்சார சாண்டிலியர் விளக்குகளை வியந்து பூதமாய் அசோகன் வசனித்தது.

எண்ணையின்றி, மின்சாரமின்றி வீட்டு விளக்குகள் எரியுமா?

எளிய தொழில்நுட்பத்தில் தண்ணீர் பாட்டில் சூரிய விளக்குகள் செய்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன், நல்ல வெய்யில், ஒரு மின்வெட்டு நாளில் பிரேஸில் பொறியியலாளருக்கு, எதேர்சையான வியர்வையில் தோன்றிய கண்டுபிடிப்பு. அருகில் படம்.

சகாய விலையில், சூழல் சிநேகமான, எளிதில் புதுப்பிக்ககூடிய, பகலில் வீட்டினுள் 55 வாட்ஸ் வரை வெளிச்சம் தரக்கூடிய, ஃப்யூஸ் போகாத, விளக்கு.

செயல்முறை எளிமையானது. பார்ப்போமா.

தண்ணீர் (சூரிய) ஒளியை அதிகமாக சிதறவைக்கும் (காற்று, புகை, அவ்வளவு சிதறவைக்காது). சென்னை சாயங்காலங்களில் பீச்சில் தொடுவானத்தில் சூரியன் மறைகையில் சிறிது நேரம் கடலே தகதகவென ஒளிருவதை கவனித்திருக்கிறோம். குளக்கரையின் வழியே சைக்கிளில் செல்கையில் குளிப்பவர்களை ஓரக்கண்ணால் ”பார்வையிட” முற்பட்டு, நீரின் பரப்பிலிருந்து சிதறிய சூரிய ஒளியில் கண்கூசி, உருட்டியடித்துக்கொண்டு முட்டிபெயர விழுந்து, பார்வையிட இருந்தவர்களின் பார்வைப்பொருளாகிய அனுபவம் எனக்கிருக்கிறது.

அறிவியல் கூற்றுகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாய் புரியும்.

சரி, விளக்கு விஷயத்திற்கு வருவோம். நேர்த்தியான லீக்காகாத வாட்டர் பாட்டிலில் ஒரளவு சுத்தமான குழாய் தண்ணீரை (அல்லது மினரல் வாட்டரை) நிரப்பி, கொஞ்சம் ப்ளீச்சிங் பௌடர் சேர்த்து (பாட்டிலினுள் நாளடைவில் பாசி பிடித்து நீர் கலங்கிவிடாமல் இருக்க), இறுக்க மூடி, ஒரு தகர ஷெட் அறையின் கூரையின் மீது ஓட்டையிட்டு முக்கால்வாசி பாட்டில் கூரையின்கீழ் இருக்கும்படியாய் (மூடிப்பக்கம் வெளியில் நீட்டிக்கொள்ளுமாரு) பொருத்திவிடுவது. வெய்யிலில் வெளிப்படும் சூரிய கதிர்கள் பாட்டிலினுள்ள தண்ணீரின் ஊடே சென்று, பல திசைகளிலும் சிதறி பாட்டிலே ஒளிருவதால், அறையினுள் சூரியவொளி நாலாதிசைகளிலும் பரவி வெளிச்சமிடுகிறது.

பழைய வீடுகளில் கூடத்தின் கூரையில் அல்லது எடுத்துக்கட்டியின் சுவர்களில் நெளிநெளி கண்ணாடி பொருத்தியிருப்பார்கள். கவனித்திருக்கலாம். இதுவும் சூரிய ஒளியை அறையினுள் சிதறவைக்கும் டெக்னிக்தான். கண்ணாடியின் ஒளிசிதறச்செய்யும் குணத்தை உபயோகித்து. மேலே சூரிய விளக்கில், நீர் இந்த ஒளிச்சிதறலை மேலும் திறம்படச்செய்கிறது.

இதில் விந்தையான விஷயம், சூரிய ஓளியினால் பாட்டிலோ நீரோ அதிகம் சூடாகாது. அவ்வகையில் ஊடுருவும் சூரியஓளிதான், வெளிச்சமாக, சிதறிவிடுகிறதே. சூடாவது கூரையின்மீது நீட்டிக்கொண்டிருக்கும், பாட்டில் மூடிதான். மூடி ஒளியை பிரதிபலித்து சிதறடிக்காமல், தன்னுள் வாங்கி, வெப்ப ஆற்றாலாய் மாற்றி, தன் வெப்பநிலையை உயர்த்திக்கொண்டுவிடும். நல்ல வெய்யிலில் பாட்டில் மூடி உருகிவிடலாம். இதனால், பிரேஸில் நாட்டில் இதற்கு பிரத்யேகமாக ஒரு சூரியஒளித்தடுப்பு பூச்சு கொடுக்கிறார்கள். மற்றபடி, இரண்டு வருடங்களானாலும் பழுதடையாத விளக்காம்.

தேவையே கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. லேட்டஸ்ட் உதாரணம் இந்த வாட்டர் பாட்டில் சூரிய விளக்கு. தொழில்நுட்பம் நம் வாழ்க்கைமுறையையே மாற்றியமைக்க வல்லது. சேஃப்டி பின், டம்ளர், கல்லுரல் தொடங்கி, ஏர், சக்கர வண்டி, புத்தகம் என ஒரு தொழில்நுட்பம் எளிமையான தயாரிப்பிலும், காலம் கருதி இடத்தாற் செயின் என தேவையிருக்கும் இடத்தில் பொருந்தி செயலளிக்கையிலும், ஞாலம் பயனடையும். இந்த வாட்டர் பாட்டில் சூரிய விளக்கு அவ்வகையில் ஒரு முயற்சி.

மத்திய கிழக்கு நாடுகள் (வெய்யில் ஜாஸ்தி) மற்றும் பிரேஸில் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உபயோகிக்கத்தொடங்கியுள்ளார்களாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏழை எளியோர் வாழும் பேட்டைகளில் இவ்வகை விளக்குகள் அமோக வரவேற்பாம். அங்கு இஸங் லிட்ராங் லிவானாக் (Isang Litrong Liwanag) என்ற இயக்கம் இவ்விளக்குகளின் உபயோகத்தை பிரபலப்படுத்தி செயலாக்கிவருகிறது. இவற்றை தயாரிப்பது குடிசைத்தொழிலாகிவருகிறதாம்.

வெயில் காலம், கொளுத்தும் வெயில் காலம், மண்டையை பிளக்கும் வெய்யில் காலம் மற்றும் டிசெம்பர் என பருவகாலங்களை கொண்ட நம் ஊரிலும், இவ்விளக்குகள் வரவேற்புடையதே. ஆனால் சொல்வதிற்கில்லை. அனைவருக்கும் மின்சாரம் கொடுக்க வக்கில்லை; ஏழை எளியோர்கள்னா இளப்பமா, அவங்களக்கு மட்டும் குறைந்த செலவில் குறைந்த வெளிச்சமா… இப்படி நமக்கே உரிய தனித்தன்மையான கோணத்தில் அணுகி இவ்வகை கண்டுபிடிப்புகளை இங்கு நாம் ஒதுக்கலாம்.

நன்றி: அருண் நரசிம்மன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved