🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வடக்கே தலைவைத்துப் படுத்தால் கேடு வருமா? - விஞ்ஞானம் சொல்வது என்ன?

அடுத்து வடக்கே தலைவைத்துப் படுத்தால் கேடு என்பது பற்றி மேக்னெட்டோரிஸப்ஷன் பின்புலத்தில் அலசுவோம். (உயிரினங்களுக்கு இருக்கும் காந்தவிசையை பாதிக்கும் குணத்தை மேக்னெட்டோரிஸப்ஷன் அதாவது காந்தவிசையேற்புத்திறன் என்கிறார்கள்)

‘தென் திசை இலங்கை நோக்க’ வடதிசை சிரசை வைத்து உறங்கினால், நாம் உலகின் (துருவ) காந்தப்புலன்களுக்கிடையே காந்தவிசைக்கோடுகளூடன் ஒத்து கிடக்கிறோம். இதனால், உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு நம்பிக்கை உள்ளது. “அங்க தல வச்சு படுக்காத, கெட்ட கனவா வரும்” போன்ற லேசாக திரிந்த ரூபத்தில் நீங்களும் அறிந்திருக்கலாம். 

எத்திசையில் தலைவைத்து எப்பரப்பில் தூங்கினாலும். இதனால் எனக்கு மேற்படி நம்பிக்கையே பிடிபடவில்லை. இருந்தாலும், விளக்கத்தை கடாசாமல் யோசித்தால், இங்கு கேட்கப்படவேண்டிய நிரூபணவாத கேள்வி, மனிதனால் உலகின் காந்தவிசையை ‘உணர’முடியுமா?

சுருக்கமான விடை. இல்லை. மனிதனின் இழையங்கள் (டிஷ்யூ) காந்தவிசையினால் பாதிக்கப்படுவதில்லை என்று ஆய்வின் மூல, நிறுவியுள்ளார்கள் விஞ்ஞானிகள். நமக்கு ‘அல்ட்ரா-வயலட்’ கதிர்களையும் ‘பார்க்க’ முடியாது. இருந்தாலும்  அப்படி செய்வதற்கு, நம் ’பார்வைப் புலனின்’ நீட்சியாய் உடனே ஒரு கருவியை கண்டுபிடிக்கமுடிகிறது. ஆனால் காந்தவிசையை உணர்ந்துகொள்ள நம்மிடம் ‘புலன்கள்’ இல்லை. இதனால் மற்ற விலங்குகளிடம் இதைக் காண்கையில், எப்படி இது சாத்தியம் என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்.

அடுத்த கேள்வியாய் “வடக்கு-தெற்காய் படுத்தால் கெட்ட கனவுகள் வரும்” என்கிற கூற்றையும் மனதில்கொண்டு, அப்ப மனித மூளையை மட்டுமாவது காந்தவிசை பாதிக்குமா என்று கேட்கலாம்.

இதற்கு விடையை 2007இல் செய்யப்பட்ட நியூரோசயின்ஸ் ஆராய்ச்சி வழங்குகிறது. கர்ருபா, ஃப்ரில்லோட்டி, மரினோ என்று ஆராய்ச்சி குழுவினர் காந்தவிசை மனித மூளையை பாதிக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர்.

சிவப்புல ஒண்ணு, பச்சைல ஒண்ணு, என கலர் கலராய் ஸீரோ-வாட்ஸ் பல்புகள் அணைந்து எரிய, வெண்புகை கலந்த செவ்வொளிச் சூழலில், தலையில் பஞ்சவர்ணங்களில் ஒயர்கள் சிதறும் எலக்ட்ரோடுகளாலான ஹெல்மெட் அணிவித்து ‘உலகம் சுற்றும் வாலிபனில்’ விஞ்ஞானி வாத்தியாரை ’ரகஸியத்தை சொல்லிடு, இல்ல…’ என்று பட்டை பெல்ட் கலந்த பெல்பாட்டம் அணிந்தவர் படுத்துவரே, அதைப்போல ஒரு பரிசோதனையிலிருந்து.

பதினேழு நபர்களை இவ்வண்ணம் தலையில் எலக்ட்ரோடுகள் ஒட்டவைத்து (அருகில் படத்தில் (a) பகுதி) இரண்டு கௌஸ் மதிப்புள்ள காந்தவிசைப் புலனுக்குள் இருத்தி, அவர்களுக்கு magnetosensory evoked potentials (MEPs) காந்தவிசை அழுத்த பேதம் ஏற்படுகிறதா என்று அளந்துள்ளனர். ஏன் இரண்டு கௌஸ் என்றால், இது மனிதன் புழங்கும் அன்றாட சூழலில் தட்டுப்படும் காந்தவிசையின் மதிப்பு. காந்த விசையை அனைத்து-ஏற்றி, அதற்கேற்ப மூளையில் ஆங்காங்கே சற்றே சலனங்கள் ஏற்படுவதை பொருத்திய எலக்ட்ரோடுகளில் தோன்றும் மின்சார சலனங்களை வைத்து அறிந்துள்ளனர்.

ஆனால், மூளையின் குறிப்பாக எப்பகுதி காந்தவிசையினால் பாதிக்கப்படுகிறது என்று நிறுவமுடியவில்லை. அதேபோல், காந்தவிசையை சற்றே தூரமாய் அகற்றினாலும் மூளையில் சலனங்கள் குறைந்துவிடுகிறது. இரண்டு கௌஸ் அளவை குறைத்தாலும் சலனங்கள் குறைந்துவிடுகின்றன.

இதையெல்லாம்விட முக்கியமாக காந்தவிசையினால் ஏற்படும் சிறிய மின்சார சலனங்களை மூளை வேறு எந்த புலங்களை வைத்தும் ‘உணர’ முடியவில்லை. அதாவது, சோதித்த நபர்களுக்கு எவ்விதத்திலும் காந்தவிசைப்புலனுள் இருப்பதை ‘அறிய’ முடியவில்லை. மிக அதிகமான மதிப்பில் 10000 கௌஸ் காந்தவிசை வைத்து transcutaneous magnetic stimulation என்று மூளையின் ஆக்ஸான்களை பாதிப்படைந்து துள்ளியெழச்செய்யமுடியும். ஆனால் சுமார் 1 கௌஸ் போன்ற சத்து குறைவான காந்த விசையினால் பெரிதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இதனால், மிக அருகே வைக்கப்படும் ஓரளவு அதிக அளவிளான காந்தவிசையினால் மூளையில் சலனங்கள் ஏற்படலாம் என்பதுவரை மட்டுமே நியோரோசயின்ஸ் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன எனலாம்.

இம்முடிவு ஒரு தொடக்கமே. இருந்தாலும், இதை வைத்துப் பார்க்கையில், உலகின் காந்தவிசை மதிப்பு ஏற்கனவே பார்த்தபடி 0.3 – 0.6 கௌஸ் என்பதால் (சோதித்த 2 கௌஸைவிட மிகக்குறைவு), இது மூளையை பாதிக்கு சாத்தியம் மிகக்குறைவு.

என் கெட்ட கனவுகளுக்கு வடக்கு-தெற்காய் படுக்கும் வாகை, அது உலக காந்தவிசைக்கோடுகளுடன் ஒத்திசைவதால், காரணம் என்று கருதமுடியாது.

நன்றி:அருண் நரசிம்மன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved