🔴 LIVE | முப்பெரும் விழா 2023


9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க திட்டம் ?

தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 ரக நாய்களை இனி இனப்பெருக்கம் செய்ய தடை என்ற விதிமுறையை புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவு (DRAFT TAMIL NADU DOG BREEDING POLICY) வழியாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம்.

இந்திய சீதோஷண நிலை, விலங்குகள் உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் என்ன? அதனால் என்ன மாதிரியான தாக்கங்கள் உருவாகும்? எந்தெந்த இனங்களுக்கு தடை என்பதை விரிவாக பார்க்கலாம்.

நாய் வளர்ப்பு:

உலகம் முழுவதும் உள்ள மக்கள் விதவிதமான செல்லப்பிராணிகளை தங்களது வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகின்றனர். அதில் எப்போதும் முதன்மையான இடம் நாய்களுக்கே. ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் தன்மைக்கேற்ப பல்வேறு நாய் இனங்கள் இருக்கின்றன.

ஆனாலும் மக்கள் வெளிநாட்டு நாய்கள் அல்லது பல்வேறு தனித்துவமான இனங்களை சார்ந்த நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிலர் அழகுக்காக, சிலர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாய்களை வாங்கி வளர்க்கின்றனர்.

இதில் ஒரு சிலர் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களையும் இறக்குமதி செய்து வளர்த்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்த நாய் இனங்களை கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாங்கி வளர்க்கும் பழக்கம் உள்ளது.

இவற்றில்ல் பல நாய் இனங்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய கலவையான சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்ப பொருந்தி போவதில் சிக்கல் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்துள்ளது.

 எந்தெந்த நாய்களுக்கு தடை?

தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களை இறக்குமதி செய்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். அதில் சைபீரியன் ஹஸ்கி (siberian husky) போன்ற நாய்களும் அடங்கும்.

அப்படி 9 நாய் இனங்களை இனி தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கிறது தமிழ்நாட்டு விலங்குகள் நல வாரியத்தின் புதிய நாய் வளர்ப்பு கொள்கை வரைவு.

அந்த பட்டியலில் பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷொண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏன் தடை?

புதிய வரைவு கொள்கையின்படி, இந்த இனங்கள் உலகின் குளிர் பகுதிகளை சேர்ந்தவை. எனவே இவற்றால் இந்திய சீதோஷண நிலையை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவற்றின் ஆரோக்கியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு இவற்றை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினரான, ஸ்ருதி வினோத் ராஜி இந்த தடைக்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதன்படி, “தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்திற்கு கைவிடப்பட்ட நாய்கள் குறித்து பல புகார்கள் வருகின்றன. பலரும் குறிப்பிட்ட நாய்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக வாங்கி விடுகிறார்கள். ஆனால், அவற்றை 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்க வேண்டும். காரணம் மைனஸ் டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் இருந்துதான் இவை வருகின்றன.”

“இந்த நிலையில் இந்தியாவின் சீதோஷண நிலையை தாங்க முடியாமல் அவை எளிதில் நோய்வாய்ப்படுகின்றன. அப்படியான நாய்களை இவர்கள் சாலையில் விட்டு செல்கின்றனர். ஒரு வருடத்தில் மட்டுமே 9 ஹஸ்கி நாய்கள் வரை நாங்கள் மீட்டுள்ளோம். இதன் காரணமாகவே இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும், சிலர் இன்பரீடிங்(inbreeding) முறையை பயன்படுத்துவதால் பிறக்கும் போதே நாய்கள் குறைபாடோடு பிறக்கின்றன என்கிறார் ஸ்ருதி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved