🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிகரிக்கும் தெருநாய்க்கடிக்குப் பலியாகும் குழந்தைகள் எண்ணிக்கை - குழந்தைகள் அதிகம் பாதிப்பது ஏன்?

நாய்க்கடியைப் பொருத்தவரை குழந்தைகள் எளிதான இலக்குகளாக அமையக் காரணம் என்ன? 

நாம் நம் தெருக்களில் காணும் நாய்கள் அனைத்தும் ஒன்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாக இருக்கும் 

அல்லது முன்னொரு காலத்தில் வீட்டின் வளர்ப்பு நாயாக இருந்து கைவிடப்பட்டவையாகவோ அல்லது அத்தகைய நாய்கள் இனப்பெருக்கம் செய்து ஈன்ற குட்டிகளாக இருக்கும். 

இன்று நம்முடன் இணைந்து வாழும் நாய்களின் மூதாதையர் - ஓநாய்களாகும். 

காட்டில் வாழ்ந்த ஓநாய்கள் மனிதர்களுடன் இணைந்து வாழப் பழகி சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. மனிதன் தனது வேட்டைக்கும் பாதுகாப்புக்கும் நாய்களைப் பயன்படுத்த நாய்கள் தங்களுக்கு எளிதாக உணவு குளிரில் இருந்து காக்கும் உறையுள் கொடுத்து உதவுபவனாக மனிதனையும் ஆக்கிக் கொண்டன. அந்த வகையில் இது ஒரு சிம்பயாடிக் உறவு முறை. 

என்னதான் இந்த உறவு முறையை இருவரும் பேணி வந்தாலும் நாய்களுக்குள்  98% மரபணு ஓநாய்களுடையது தான். 

அவை தங்களுக்கான உணவு, தங்களுக்கான இணை, தங்களுக்கான எல்லை, தங்களுக்கான எதிரி போன்ற விஷயங்களில் அவ்வப்போது ஓநாய்களாக மாறும். 

தங்களது உணவுக்கு போட்டியாக யாரும் வந்தாலோ? தனது இணைக்கு போட்டியாக யாரேனும் வந்தாலோ?அல்லது தான் வகுத்து வைத்துள்ள அதன் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தாலோ? தனது எதிரி என்று யாரையும் கருதி விட்டாலோ? யாராலும் அச்சுறுத்தப்பட்டாலோ?

அவர்களுக்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதலை முன்னெடுக்கும் அந்த தாக்குதலின் விளைவே மனிதனை நாய் கடிக்கும் சம்பவங்கள். பொதுவாக, ரேபிஸ் நோய் ஏற்படாத நாய்களை மனிதர்கள் எரிச்சலூட்டாமல் / அல்லது தூண்டாமல் அவை கடிக்க முற்படுவதில்லை.

ரேபிஸ் நோய் ஏற்பட்ட நாய் எந்தத் தூண்டலும் இல்லாமலும் தானாக வெறி கொண்டு பார்ப்பவர்னைவரையும் கடிக்கும். குழந்தைப் பருவத்தினரைப் பொருத்தவரை, உயரம் குறைவு கிட்டத்தட்ட நாய்களின் உயரத்துக்கு ஈடாக இருப்பார்கள். 

எனவே, நாய்கள் இயற்கையாகவே குழந்தைகளை தங்களுக்கு இணையான எதிரியாகக் கணக்கிடுகின்றன.

குழந்தைகளுக்கு நாய்களின் வாழ்வியல் குறித்து தெரியாது. அவர்கள் நாய்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு ( வால் / தலை) போன்ற பகுதிகளில் பிடித்து இழுத்து வெறி ஏற்றக்கூடும் அல்லது நாய்களின் எல்லைகளில் வரம்பு மீறி நுழைந்து அதில் இருந்து மீளத் தெரியாமல் இருக்கலாம். 

உயரம் குறைவாக இருப்பதாலும் நாய்கள் கடிக்கும் போது எளிதில் கீழே விழுந்து விடுவார்கள் என்பதாலும், தலை, முகம், கழுத்து போன்ற முக்கியப் பகுதிகளில் கடிக்கும் நிகழ்வுகள் இருக்கும்.

நாய்கள் - ஓநாய்களின் வாரிசு என்பதால் ஒரு நாய் தாக்கும் போது கூட்டமாக மற்ற நாய்களும் இணைந்து இரை மீது தாக்குதலை முன்னெடுக்கும். 

நாய்களுக்கு இது குறித்து சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. ஆறறிவு கொண்டு ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் வரை முன்னேறி இருக்கும் மனிதர்களாகிய நமக்கே மந்தை பொதுபுத்தி உண்டு எனும்போது நாய்களுக்கு சொல்லவா வேண்டும்?.

குழந்தைகளைக் கடிக்கும் நாய்களைப் பொருத்தவரை, அவற்றை இரைக்காக கடிப்பதை விடவும்  தங்களின் எதிரி என்று நினைத்து தற்காத்துக் கொள்ளவே இவ்வாறு செய்யும் வாய்ப்பு அதிகம். 

பெரும்பாலும் அந்த குழந்தைகளுக்குப் பழகிய அதன் வீடுகளைச் சுற்றியுள்ள நாய்களாலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. 

குழந்தைகளைப் பெற்ற நாம் தொடர்ந்து அவை நன்றாக வளரும் வரை கண்காணித்து கூடவே நமது கண்பார்வையில் வளர்ப்பது கடமையாகிறது.

குழந்தைகளை நாய்கள் இருக்கும் பகுதிகளில் தனியாக விளையாட விடுவது எப்போதும் ஆபத்து என்று நாம் உணர வேண்டும்.

நாய்களை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றை முறையாகப் பேணி பராமரித்து அவற்றால் வேறு யாருக்கும் ஊறு நேராத வண்ணம் வளர்க்க வேண்டும். 

அரசு -  கவனிப்பாரற்று தெருக்களில் சுற்றித்திரியும் நாய்க்கூட்டங்களை கட்டுப்படுத்த  உடனடியாக திட்டங்கள் தீட்டி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

குழந்தைகளுக்கு நாய்கள் குறித்தும் அவற்றை அணுக வேண்டிய முறைகள் குறித்தும் நாய்களுடன் தவிர்க்க வேண்டிய சேட்டைகள் குறித்தும் தெளிவாக பாடங்கள் எடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய நமது கடமை.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved