🔴 LIVE | முப்பெரும் விழா 2023


245 சிவில் நீதிபதி நியமங்கள் ரத்து - சமூகநீதி பேசும் அரசுக்கு விழுந்த சவுக்கடி

அண்மையில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு தேர்வு ஆணையம் வெளியிட்டது. அதில் 245 பேர்கள் தேர்வாகியிருந்தனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் முதன் முறையாக நீதிபதிகளாக தேர்வாகி இருந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற்ற சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (29.02.2024) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி ஷீனா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக B.C., M.B.C., பிரிவு மாணவர்களை பொதுப் பட்டியலில் சேர்க்காமல் பட்டியல் தயாரிக்கப்பட்ட இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், ராஜசேகர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யும்படி டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டனர்.

சமத்துவம், சமூகநீதி பேசும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி நீதிபதிகள் தேர்வை ரத்து செய்துள்ளது திமுக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணை வாரியத்தில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது என்று பல ஆண்டுகளாக சமூகநீதி செயல்பாட்டாளர்கள் பலரும் குற்றம் சுமத்திவருகின்றனர். தமிழக அரசு இதில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல், போதிய அக்கறையின்றி செயலற்று இருந்து வருகிறது. இதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சாமானியர்கள் புரிந்துகொள்வது எப்படி?

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்துவருவது அனைவரும் அறிந்ததே.

அதாவது 100 இடங்கள் இருந்தால் அதில் 69 இடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவுகளில் இருப்பவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். மீதி இருக்கும் 31 இடங்களுக்குப் பெயர் OC. அதாவது Open Category. தமிழில் இதற்குப் பொதுப் பட்டியல் என்று பெயர்.

BC, MBC, SC, ST பிரிவுகளில் உயர் மதிப்பெண்கள் எடுத்தவர்களை இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் கொண்டு வராமல், "நீங்க தான் நல்ல மார்க் எடுத்துருக்கீங்கள்ல, உங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை, நீங்க பொது பட்டியல்லயே போங்க, இதனால உங்க இடத்துல உங்க கேட்டகிரில (Category) இருக்குறவங்களுக்கு இடம் கிடைக்கும்..." என்று சொல்லி, அந்த பொதுப் பட்டியலில் இருக்கும் இடங்களிலேயே முதலில் நிரப்புவார்கள். இப்படி செய்தால் தான் அந்த இட ஒதுக்கீடு பட்டியலில் இன்னும் அதிகமானவர்களுக்கு இடம் கிடைக்கும். அது தான் சரியான சமூக நீதி.

இப்படியான நடைமுறை தான் தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

அந்த நடைமுறையை இந்த சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு முடிவுகளில் TNPSC பின்பற்றவில்லை. அதற்கு மாறாக ஒன்றிய அரசில் இருந்து வரும் இட ஒதுக்கீட்டு நடைமுறையை தமிழ்நாடு அரசு பின்பற்றிவிட்டது.

அதைத் தான் நீதிமன்றம் ரத்து செய்து,வழக்கமாக தமிழ்நாட்டில் என்ன இட ஒதுக்கீடு நடைமுறை இருக்குமோ, எப்படி பின்பற்றபட்டு வந்ததோ, அதை இந்த சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரத்தில் செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது.

நீதிமன்றம் தந்துள்ள அந்த தீர்ப்பால் இன்னும் அதிகப்படியான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நீதிபதிகளாக வருவார்கள். சமூகநீதி பேசும் தமிழக அரசு அரசுப்பணியிட நியமனங்களில் போதிய கவனமின்றி இருந்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி:மோகன்ராஜ்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved