🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆளும்கட்சியில் விருப்பமனு அளித்தார் விஜய் ப்ரியதர்ஷன்!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், இந்தியாவை ஆளும்கட்சியான பாஜக தலைமையில் தமாக, ஐஜேகே, புதியநீதிக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்து மற்றொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனைப்போட்டிக்கு அரசியல் களம் தயாராகி வருவதுபோல் தெரிகிறது.


சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தாரைப் பொறுத்தவரை என்றும் மேய்ப்போனாக இருந்ததில்லை. குறிப்பிடத்தக்க சில ஆளுமைகளைத் தவிர அரசியலில் என்றும் கம்பளத்தாருக்கு இறங்குமுகம் தான். நல்வாய்ப்பாக அதிகாரப்பரவல் கிராமங்கள் வரை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டம்  கொண்டுவரப்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் மலர்மாலை கம்பளத்தார் கழுத்திலும் ஏறுகிறது. 

பெரும்பான்மை மூலம் அதிகாரம் தீர்மானிக்கப்படும் ஜனநாயக வாக்குவங்கி அரசியலில் பகுதிவாரியாக பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட சாதிகளின் ஆதிக்கத்தில் கடந்த அரைநூற்றாண்டுகாளமாக தமிழக அரசியல் சுழன்று வருகிறது. இதனால் தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தும் அரசியல் அதிகாரம் சிலசாதிகளின் கைப்பிடிக்குள்ளேயே இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நோக்கி அரசியல் களம் நகர்த்தப்பட்டிருக்குமானால் பெரும் எண்ணிக்கையிலான சாதிகளுக்கு அரசியல் அதிகாரம் சாத்தியப்பட்டிருக்கும். வரலாறு மெல்ல மெல்ல அதைநோக்கி அரசியலை நகர்த்தும் என்று நம்புவோமாக.


இப்படியான சூழலில், சுதந்திர இந்தியாவில் கம்பளத்தாருக்கு என்றும் எட்டாக்கனியாக இருந்துவரும் அரசியல் அதிகாரத்தை எட்டிப்பிடிக்கத் துணிந்துள்ளார் ஒரு இளைஞர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், ஆண்டுதோறும் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாட்கள் மற்றும் தேர்தல் சமயங்களில் சமுதாய இளைஞர்களிடையே அரசியல் அதிகாரம் குறித்து எழும்கோபமும், ஆத்திரமும் அடுத்த அரைமணி நேரத்தில் அமுங்கி ஒடுங்கும். அதிகாரம், அது எந்த வடிவில் இந்தாலும் யாருடைய வீட்டுக்கதவையும் திறந்து வந்து மடியில் அமர்ந்துகொள்ளாது. எந்த ஒரு சமுதாயம் அதற்கான திட்டமிடலையும், ஒருங்கிணைப்பையும், தியாகத்தையும், உழைப்பையும் சிலநூறாண்டுகளுக்காவது செலவிடத்தயாராகிறதோ, அந்த சமுதாயம் மட்டுமே அதிகாரத்தை நோக்கி நகரும்.

அப்படியான எந்த திட்டமிடலையும், வழிமுறைகளையும் வகுத்துக்கொண்டு செயல்படாத கம்பளத்தார் சமுதாயத்தில் பிறந்த ஒரு இளைஞர், கம்பளத்தார் நினைத்துப்பார்க்க முடியாத, கற்பனைக்கு எட்டாத, இதுவரை யாரும் முயன்று பார்த்திராத துணிகரச் செயலில், அதுவும் கட்சியிலுள்ள கம்பளத்தாரை என்றும் ஒரு பொருட்டாக மதிக்காமல், கருவேப்பிலையாக பயன்படுத்திக்கொள்கிறது என்று சமூகம் கொந்தளிக்கும் இன்றைய ஆளும்கட்சியான திமுக-வில் ஒருவர் மக்களவைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார் என்றால் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூடத்தான்.    


யார் இந்த இளைஞர்? அவருக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்? இவர் பின்னனி என்ன? என்பதை ஆர்வத்துடன் விசாரிக்கத் தொடங்கினோம்.  நம்பவே முடியவில்லை பத்துப்பொருத்தமும் பக்காவாக பொறுந்து வருகிறதே. கம்பளத்தாருக்கு காலம் வழங்கிய அருட்கொடையா இது? என வியந்தோம்.

விஜய் என்றால் வெற்றி. 

ப்ரியதர்ஷன் என்றால் அழகானவர், வசீகரமானவர், கவர்ச்சியானவர் என்று அர்த்தம் சொல்கிறது அகராதி.

விஜய்+ப்ரியதர்ஷன் இரண்டும் இணைந்து "விஜய் ப்ரியதர்ஷன்" என்றால் அழகோடு வெற்றியும் சேர்ந்து கம்பளத்தாரின் அரசியலை வென்றெடுக்கத் துடிக்கிறது என்று மனதைப் பொருள்கொள்ளச் செய்கிறது.  

ஆம், விஜய் ப்ரியதர்ஷன், 28 வயது இளைஞர், திருமணமாகதாவர். தன் சமூகத்தின் மீதுமட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் மீதே அக்கரை கொண்டவராக, அதுவும் குறிப்பாக, 1970-களில் 2-ஏக்கர் தன் சொந்த நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு இலவமாக வழங்கி தமிழ்க்குறவன் குடிகொண்டிருக்கும் பழனி குன்றுக்கு இணையாக நற்குணத்தால், நற்செயலால் ஓங்கி உயர்ந்து வாழும் ரெங்கையன்பட்டி திரு.பழனிச்சாமி அவர்களின்  பெயரன் தான் விஜய் ப்ரியதர்ஷன்.  

திண்டுக்கல் மாவட்டம், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி மற்றும் செந்தூர் கிரஷர் உரிமையாளரும், தொழிலதிபருமான திரு.அன்பரசு ஆகியோரின் அன்புமகனான விஜய் ப்ரியதர்ஷன் நேற்று (06.03.2024) காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட கழக முன்னனியினர், நலம்விரும்பிகள் புடைசூழ விருப்பமனு அளித்துள்ளார். 

திமுகவின் தொடக்ககாலம் தொட்டு இன்று வரை உறுப்பினராக இருக்கும் விஜயின் பாட்டனார் திரு.பழனிச்சாமி அவர்கள் கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும், பாட்டியார் திருமதி. பொம்மாயம்மாள் கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து அரிய பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்கள். குறிப்பாக 1970-களிலேயே மின்சாரம், குடிநீர்,,சாலை வசதி போன்ற மக்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 

அதேபோல், சமுதாயப்பணி மேற்கொள்ளும் எந்த அமைப்பிற்கும் வேடந்தாங்கலாக இன்று வரை இருந்துவருபவர்கள்.  இவர்களின் தொடர்ச்சியாக மாண்புமிகு ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, அவரின் கட்டளையை நிறைவேற்றும் தளபதியாக, துடிப்புமிக்க செயல்வீரராக கால்நூற்றாண்டு காலமாக கழகப்பணியாற்றி வரும் தந்தையார் திரு.அன்பரசு, கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு தமிழக அரசின் கிரீன் சாம்பியன் விருதைப்பெற்றுத்தந்து, சிறந்த ஊராட்சி மன்றத்தலைவியாக வலம் வரும் திருமதி.சுந்தரி அன்பரசு என பொதுவாழ்வில் புடம்போட்ட குடும்பத்திலிருந்து, எல்லாவித தகுதியோடும், திறமையோடும் மூன்றாம் தலைமுறை கழக விசுவாசியாக நாடாளுமன்றம் செல்ல அணியமாகி வருகிறார் விஜய் ப்ரியதர்ஷன்.


சமூகநீதி, எல்லோர்க்கும் எல்லாம் என்பதே என் இலக்கு, அதுவே தனது "திராவிட மாடல் ஆட்சி" யின் தத்துவம் என கொள்கைப் பிரகடனம் சூடி, இந்தியா கூட்டணியை கட்டமைத்த சிற்பியாக, வட இந்தியாவிற்கும் வழிகாட்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தனது கருணைப் பார்வையை  40 லட்சம் மக்கள் தொகை கொண்ட, அரசியல் அதிகாரமயப்படுத்தப்படாத, அரசியலில் எதுவும் கிட்டாத தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீது  காட்டினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையும், வரலாறும் கொண்ட சமூகம் புத்துணர்வு பெறும். "திராவிட மாடல்" ஆட்சியின் லட்சியமும் நிறைவேறும்.

விஜய் ப்ரியதர்ஷன் முயற்சி வெற்றிபெறவும் , 40 லட்சம் கம்பளத்தாரின் கனவு நிறைவேறவும், நம் ஒவ்வொருவரின் வாழ்த்தும், பிராத்தனையும் உறுதுணையாக அமையட்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved