🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் 1.1.2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை (07.03.3024) உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நீர்நிலை தகவல்களுக்காக தனி இணையதளத்தை 6 மாதத்தில் தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு என்பது வெறும் 20 ஆண்டுகளில் தான் மிக உச்சபட்சமாக நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் ஏரிகளை ஒட்டி வீடுகள் கட்டியது, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியது, நீர் நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியது, ஆறுகளின் கால்வாய்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டது எல்லாமே வெறும் 20 முதல் 25 வருடங்களில் தான் அதிக அளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்று நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அடிக்கடி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வைக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

  

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூா் கண்மாய் 575 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக, தற்போது 400 ஏக்கராக குறுகிவிட்டது. இந்தக் கண்மாய் கே.கே.நகா், மேலமடை, கோமதிபுரம், அண்ணாநகா், பாண்டிகோவில் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீா் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் ரூ.150. 28 கோடியில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் முதல் கோமதிபுரம் வரை 2.1 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

தென்கால் கண்மாயில் விளாச்சேரி பிரதான சாலையிலிருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. இதன் காரணமாக, வண்டியூா் கண்மாய், தென்கால் கண்மாய் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த இரு இடங்களில் உள்ள கண்மாய்களில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பால பணி மற்றும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலை பணிக்கு தடை விதித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட இடங்களை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: வண்டியூா், தென்கால் கண்மாய்களின் கரையோரங்களை மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளோம். வேறு எந்த திட்டமும் செயல்படுத்த மாட்டோம். இந்தப் பாலங்கள் கட்டுவதன் மூலம் கண்மாயின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வண்டியூா், தென்கால் கண்மாய் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகள் தங்களது உத்தரவில்,  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீா்நிலைகளின் உண்மையான பரப்பளவு, தற்போதைய பரப்பளவு உள்பட அனைத்து விவரங்கள் அடங்கிய தனி இணையதளத்தை தமிழக அரசு 6 மாதங்களில் உருவாக்க வேண்டும். இந்த இணையதளம் அனைவரும் பாா்வையிடும் வகையில் இருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதை தனிநபா்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதிகாரிகள் கள ஆய்வு மட்டும் நடத்தாமல், ஆவணங்களையும் சரிபாா்த்து இணையதளத்தில் தகவலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராத வகையில் கண்காணிக்க வேண்டும். நீா்நிலைப் பகுதிகளில் 1.1.2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டா வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பட்டாக்களை ரத்து செய்து, நீா்நிலைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். நீா்நிலைகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொண்டால், நீா்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகளைச் செய்ய வேண்டும்.

நீா்நிலைகள் இயற்கை அளித்த கொடை. இது மனிதா்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகள், பறவைகளுக்கும் சொந்தமானது. தற்போது நீா்நிலைகள் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீா்நிலைகளில் தேங்கும் தண்ணீரின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை தமிழக அரசு ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதற்கிடையே நீர்நிலைகள் என்பதின் வரையறை என்ன என்பது பற்றிய விவரங்களை தமிழ் ஆர்வலர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் தமிழகத்தில் 47 வகையான நீர்நிலைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. 

அவை:

 1. அகழி: கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.

 2. அருவி: மலை முகட்டில் தேங்கியநீர் குத்திட்டு விழுதல்.

 3. ஆறு: பெருகி ஓடும் நதி.

 4. இலஞ்சி: பலவற்றுக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.

 5. ஆழிக்கிணறு: கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

 6. உறைகிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

 7. ஊருணி: மக்கள் பருகும் நீர்நிலை.

 8. ஊற்று: பூமிக்கு அடியிலிருந்து நீர் ஊறுவது.

 9. ஏரி: பாச நீர்த்தேக்கம்.

 10. ஓடை: அடியிலிருந்த ஊற்று எடுக்கும் நீர்/ எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

 11. கட்டுக் கிணறு: சரளை நிலத்தில் வெட்டி, கல் செங்கல் இவற்றால் சுவர் கட்டிய கிணறு.

 12. கடல்: சமுத்திரம்

 13. கண்மாய் (கம்வாய் - கம்மாய்): பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

 14. கலிங்கு: ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்காமல் பலகைகளால் / கற்களால் அடைத்துத் திறக்கக்கூடிய அமைப்பு.

 15. கால்: நீரோடும் வழி

 16. கால்வாய்: ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீரூட்டும் வழி.

 17. குட்டம்: பெருங்குட்டை

 18. குட்டை: சிறிய குட்டம்

 19. குண்டம்: சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை.

 20. குண்டு: குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

 21. குமிழி: நிலத்தில் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடைகிணறு.

 22. குமிழி ஊற்று: அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று.

 23. குளம்: ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர்நிலை.

 24. கூவம்: ஓர் ஒழுங்கில் அமையாத கிணறு.

 25. கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

 26. வாளி: ஆற்றுநீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச்செல்லுமாறு அமைந்த நீர்நிலை.

 27. கேணி: அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.

 28. சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.

 29. சுனை: மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர்நிலை.

 30. சேங்கை: பாசிக்கொடி மண்டிய குளம்.

 31. தடம்: அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.

 32. தளிக்குளம்: கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர்நிலை.

 33. தாங்கல்: தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஏரி.

 34. திருக்குளம்: கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இதற்குப் புட்(ஷ்)கரணி எனப் பெயர்.

 35. தொடுகிணறு: ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்.

 36. தெப்பக்குளம்: ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.

 37. நடைகேணி: இறங்கிச் செல்லுமாறு படிக்கட்டு அமைந்த பெருங்கிணறு.

 38. நீராவி(ழி): மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் சொல்வர்.

 39. பிள்ளைக் கிணறு: குளம் ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.

 40. பொங்கு கிணறு: ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

 41. பொய்கை: தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை.

 42. மடு: ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

 43. மடை: ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

 44. மதகு: பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

 45. மறுகால்: அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

 46. வலயம்: வட்டக் குளம்.

 47. வாய்க்கால்: ஏரி முதலிய நீர் நிலைகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved