🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துக- வலுக்கும் கோரிக்கை

18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, முதற்கட்டத் தேர்தல் தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களிலுள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 வரை ஏறக்குறைய 80 நாட்கள் அமுலில் இருக்கும். 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில் தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், 21 மாநிலங்களில் உள்ள  62 தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நிறைவுபெற்றுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்தைவிதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக எம்பி வில்சன், பாமக நிறுவன தலைவர் மரு.இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும், வர்த்தக சங்கப்பிரதிநிதிகளும் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை விலக்கிக்கொள்ளுமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு, புதுவையில் லோக்சபா தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமுலில் இருப்பது பொதுமக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதால் பொதுமக்களும், வணிகர்களும் ரூ.50000/- அதிகமாக பணத்தை எடுத்துச்செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தொழில் நடத்தமுடியாமல் வேலை இழப்பும், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. கூட்டம், ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு காவல்துறை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பொதுவாக அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் காவல்துறை அனுமதி பெற்றுத்தான் கூட்டம் நடத்த வேண்டுமென்பது போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல் உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழகத்தில் எந்தத்தேவையும் இல்லாத நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தி வருவது எவ்விதத்திலும் சரியானது அல்ல. எனவே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிந்த இடங்களில் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி, பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் அன்றாடப்பணிகளை இடையூறின்றி ச்செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் செவிமடுக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved