🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒற்றை சாதிச்சான்றிதழ் - 40 ஆண்டுகாலம் வஞ்சிக்கப்பட்ட சாதிகளுக்கு விடியலைத்தந்த முதல்வர்!

ஆங்கிலேயர்களின் குற்றப்பரம்பரை சட்டத்தால் கடும் அடக்குமுறைக்கு உள்ளான தொட்டிய நாயக்கர், கள்ளர், ஊராளிக்கவுண்டர், வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 68 சமூகங்கள் சீர்மரபினர் என்று வகைப்படுத்தப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 20% இடஒதுக்கீட்டில் பலன்பெற்று வருகின்றனர். இந்த 68 சமூகங்களுக்கு 1979 வரை DNT (Denotified Tribes) எனவும் அதன் பின் DNC (Denotified Communities) எனவும் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் இதேபோல் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட சாதிகள் மத்திய அரசால் DNT என்று வகைப்படுத்தப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் தமிழகத்திலுள்ள 68 சாதிகளுக்கு மட்டும் DNC என்று சான்றிதழ் வழங்கப்படுவதால் மத்திய அரசின் சலுகைகளை பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.


இந்நிலையில் தமிழகத்திலுள்ள 68 சமூகங்களும் ஒன்றிணைந்து 2014 முதல் தங்களுக்கு மீண்டும் DNT என்றே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல்வேறு கட்டப்போராட்டங்களை நடத்தி வந்தனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்றுவந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது அன்றைய ஆளுங்கட்சியான அதிமுக சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி DNT சான்றிதழ் வழங்குவதாக அறிவித்து, பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியை ஆதரிக்கக்கோரியது. ஆனால் பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி DNT என்று சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கு பதிலாக DNC/DNT என இரட்டை சாதிச்சான்றிதழ் வழங்கியது. ஒரே சாதிக்கு இரட்டை சாதிச்சான்றிதழ் வழங்கும் அரசின் விநோதப்போக்கை ஏற்க மறுத்து சீர்மரபினர் நலச்சங்கம் ஒற்றைச்சான்றிதழ் கேட்டு தொடர்ந்து போராடி வந்தது.

2 கோடி மக்களுள்ள 68 சாதிகளைச் சேர்ந்த சீர்மரபு சாதியினர் பல்லாண்டுகளாகப் போராட்டத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாத எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி, 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணிநேரம் முன்பாக மேற்படி சீர்மரபினரை உள்ளடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 108 சாதிகளில் வன்னியர் என்ற ஒரே சாதியினருக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது. இதனால் கொதித்தெழுந்த சீர்மரபினர் சாதிகள் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவிற்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதனால் தென்மாவட்டங்களிலும் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர் அதிகமுள்ள நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிமுக பெருத்த தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

         

   

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சமுதாயங்களின் கொந்தளிப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட  அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படும் என ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார்.  

1850-களில் இருந்து நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கிலேயர்களின் கொடுஞ்சட்டத்தால் பாதிக்கப்பட்ட இச்சமூகங்கள் சுதந்திர இந்தியாவில் 40 ஆண்டுகளாக ஏமாற்றுப்பட்டு  வருவதற்கு ஒரு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவரின் வாக்குறுதியை நம்பி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெருவாரியான வாக்குகளை வாரிவழங்கினர்.

2021-ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போது உச்சத்தில் இருந்த கொரோனோ பெருந்தொற்றிலிருந்து மக்களைக்காப்பாற்ற போராடி வந்தார். எனினும் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிகவும் முனைப்புக்காட்டி வந்தார். அதன் தொடர்ச்சியாக ஆலங்குளம் தொகுதியில் சீர்மரபின சாதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அரசு அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் சந்தித்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபு வகுப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அரசுத்தரப்பிலிருந்து உறுதியான, நம்பிக்கையான பதில் கிடைக்கப்பெறாததால் கடும் விரக்தியில் அடைந்தனர். 

        

கோடிக்கணக்கான மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் முக்கியச்செய்தியானது. இந்நிலையில், சீர்மரபினர் வகுப்பினர் மனம் மகிழும்படியான அறிவிப்பை இன்று வெளியிட்டு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர்.

அதன்படி, இன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பினருக்கு இதுவரை  DNC/DNT என்று வழங்கப்பட்டுவரும் இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், சீர்மரபினரின் ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்திய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ தோழர் சின்னதுரை மற்றும் இக்கோரிக்கைக்கு துணைநின்ற எல்லா கட்சித்தலைவர்களுக்கும், போராட்ட வீரர்களுக்கும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved