🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைத்தலைவராக என்.பவுல்ராஜ் நியமனம்!

ஈரோடு மாவட்டம் செண்பகப்புதூர் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.என்.பவுல்ராஜ். இவர் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவராகவும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற நகரச்செயலாளராகவும் பணியாற்றி பொதுவாழ்வில் அனுபவம் பெற்றவர். 

சத்தியமங்கலம் நகரில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்போடும், எழுச்சியோடும் நடைபெற அனைவரையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப்பங்காற்றி வருபவர் பவுல்ராஜ். மேலும், அனைத்து சமுதாய அமைப்புகளுடனும் நல்லுறவைப்பேணுவதோடு, மிகுந்த ஒத்துழைப்பையும் வழங்கி வருபவர்.  முக்கிய நிகழ்வாக  வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்காக ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து, விழா வெற்றிகரமாக நடைபெற பொருளாதார ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் பக்கபலமாக இருந்தவர் பவுல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஈரோடு மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் டிஎன்டி சாதிச்சான்றிதழ் பெருவதில்  நீண்டகாலம் இருந்த வந்தசிக்கலைத் தீர்த்துவைத்து எளிமையாகச் சாதிச்சான்றிதழ் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் என்.பவுல்ராஜ்.

   

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும், அவரது மறைவிற்குப்பிறகு ரஜினிகாந்த் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக பொதுவாழ்வில் நேரடியாக பங்கேற்றவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவி வகித்தபோது பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் அழைப்பையேற்று அதிமுகவில் இணைத்துக்கொண்டு நேரடியாக கட்சி அரசியலுக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு உடனடியாக சத்தியமங்கலம் தெற்கு  ஒன்றிய அம்மாபேரவைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஈரோடு மேற்கு மாவட்ட அம்மாபேரவைத் துணைத்தலைவராக என்.பவுல்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை சந்தித்து என்.பவுல்ராஜ் அவர்கள் வாழ்த்துப்பெற்றார்.

 

தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள அதிமுகவில் கட்சியில் இணைந்து குறுகிய காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி, ஒருசில ஆண்டுகளிலேயே தலைமையின் நம்பிக்கையைப்பெற்று ,பிரதான அணி ஒன்றின் மாவட்ட துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பவுல்ராஜ் அவர்களின் அரசியல் பணி சிறக்கவும், அவர் அரசியலில் அடுத்தடுத்த உயரங்களை எட்டவும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved