🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக இயக்கத்தையே புரட்டிப்போட்ட விஞ்ஞானி கண்டுபிடிப்பும், மர்ம மரணமும்...

இந்த உலகம் இவ்வளவு வேகமாக,சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவரின் 166 வது பிறந்தநாள் இன்று. அவர் கண்டுபிடித்துத் தந்த கருவியால் தான் ஒட்டுமொத்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி இந்த உலகத்தின் இயக்கத்தையே புரட்டிப் போட்ட ஒரு கண்டுபிடிப்பைத் தந்தவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இது வரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் புதிரான மர்மம்.

யார் அவர்? 

அவர் தான் ரூடால்ப் டீசல்.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்த பொறியாளர்.

கால் நடை, மாட்டு வண்டி, குதிரை வண்டி என்றே சென்று கொண்டிருந்த மனிதனின் பயணம் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் தான் நீராவி இன்ஜின், நிலக்கரி இன்ஜின் என்று வேகமெடுத்து கொண்டிருந்தது. எரிபொருள் சார்ந்த கண்டுபிடிப்புகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன.1876 ல் பெட்ரோல் இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்ரோல் இன்ஜின் கண்டுபிடிக்கப்படுவதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் 1858 ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தியோடர் டீசல்-எல்ஸே ஸ்ட்ரோபெல் தம்பதிகளின் மூன்று மகன்களில் இரண்டாவது மகனாக ரூடால்ப் டீசல் பிறந்தார். இவருக்கு 12 வயதிருக்கும் போது 1870 ல் பிரான்ஸ்-ஜெர்மனி இடையே சண்டை நடக்க, பிறப்பால் ஜெர்மனியரான ரூடால்ப் டீசல் குடும்பம் வேறு வழியின்றி லண்டனுக்கு இடம் பெயர்ந்தது.

வரலாற்றின் போக்கை உன்னிப்பாக படித்துப் பார்த்தால் அது காரணமின்றி எந்த செயலையும் செய்வதில்லை என்பது புரியும்.

பிரான்ஸிலேயே இருந்திருந்தால் தன் அம்மா பணி செய்த தோல் தொழிற்சாலைக்குப் பணிக்கு போயிருக்கக் கூடிய ரூடால்ப் டீசலின் கல்விப் பயணம் இங்கிலாந்து சென்ற பின்னர் தான் வேறு திசையில் வேகமெடுத்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும், தன் 14 வது வயதில் நான் இன்ஜினியராக போகிறேன் என்று தன் விருப்பத்தை தன் பெற்றோருக்குத் தெரிவித்தார் ரூடால்ப் டீசல்.

அதன் பின்னர் படித்து பட்டம் பெற்று அதன் பின்னர் தனது பேராசியர்களுள் ஒருவரான கார்ல் வான் லிண்டே என்பவரது ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

அந்தப் பணியின் போது தான் டீசலுக்கு டீசல் இன்ஜின் கண்டுபிடிக்கும் ஐடியா உருவானது.

அது என்ன டீசல் இன்ஜின்? 

இன்ஜின்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று கேட்டால், இரண்டு வகைகள் என இன்றைக்கு எல்கேஜி குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடும்.

ஒரு நல்ல தடிமனான பாத்திரத்தை எடுத்து, அதில் பெட்ரோலையும்-காற்றையும் கலந்து வைத்து பாத்திரத்தை நன்றாக மூடி விட வேண்டும். அந்த மூடி மேல் ஒரு சின்ன ஓட்டை போட்டு அதன் வழியாக தீயை பொருத்திப் போட்டால் என்ன ஆகும்? 

பெட்ரோலில் தீ பற்றிக் கொள்ளும்.

இது தான் இண்டர்ன்ல் கம்பூசன் இன்ஜின் எனும் (Internal Combustion Engine) இன்ஜினின் அடிப்படை.

பாத்திரம் என்ற இடத்தில் சிலிண்டர் என்று போட்டுக் கொள்ளுங்கள், அந்த சிலிண்டருக்குள் பிஸ்டன் எனும் ராடுகள் இருக்கும். அந்த பிஸ்டன் ராடுகளின் வெளிப்பக்கம் ஒரு கியர் பாக்ஸில் இணைக்கப்பட்டு இருக்கம். கியர் பாக்ஸ் வண்டியின் சக்கரங்களோடு இணைக்கப்பட்டு இருக்கும். சிலிண்டருக்குள் பெட்ரோல் ஒரு குழாய் வழியாக வரும். அதே போல காற்றும் ஒரு குழாய் வழியாக வரும்.அந்த வழிகளில் வரும் பெட்ரோலும்-காற்றும் கலந்த கலவை சிலிண்டரில் தயாராக இருக்கும். இப்போது சிலிண்டர் மூடி மேலே ஒரு பத்தி குச்சி இருக்கும். அதன் பெயர் தான் ஸ்பார்க் பிளக் Spark Plug.அந்த சிலிண்டருக்குள் தீயைப் பொருத்திப் போடுவது தான் இந்த ஸ்பார்க் பிளக்கின் பணி. 


வண்டியில் சாவி போட்ட உடனே, பேட்டரி மூலமாக ஸ்பார்க் பிளக்கிற்கு உயிர் வந்து, அது ஒரு தீப்பொறியை சிலிண்டருக்குள் தள்ளும், அதனால் உள்ளே இருக்கும் அந்த பெட்ரோல் கலவை தீப்பிடிக்கும், இதனால் ஒரு சக்தி உருவாகும்.அந்த சக்தி அந்த பிஸ்டன் ராடுகளை மேலும் கீழுமாகத் தள்ளும், அது அசைகையில் கியர் பாக்ஸூம் அசையும், இதனால் கியர் பாக்ஸூடன் இணைக்கப்பட்ட சக்கரங்கள் நகரும். இது தான் பெட்ரோல் இன்ஜின்.

புரிதலுக்காக எதோ மிக எளிமையாக எழுதி விட்டேன். ஆனால் அன்றைக்கு இதில் ஏகப்பட்ட சவால்கள் இருந்தன. அந்த தீயைப் பொருத்திப் போடும் சிஸ்டமான ஸ்பார்க் பிளக்குடன் பெரிய அளவில் அன்றைய காலகட்டத்தில் மல்லுக் கட்ட வேண்டியதிருந்தது. 

இதற்கு மாற்று என்ன என்று பல வழிகளில் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்படியான ஆராய்ச்சிகளுள் ஒன்றைத் தான் டீசலும் செய்து கொண்டிருந்தார்.

பல்வேறு சாகசங்களுக்கு இடையில் ஒரு வழியாக 1893 களில் தன் இன்ஜினை கண்டுபிடித்தார் ரூடால்ப் டீசல்.

"மிக அதிக அழுத்தத்தில் காற்றை சிலிண்டருக்குள் வைத்தால் அது சூடாகி விடும். அது சூடாக இருக்கும் சமயத்தில் எரிபொருளை லேசாக தூவினால் போதும். இன்ஜின் வேலை செய்யும்..." என்று தன் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவித்தார்.

டீசல் இன்ஜின் பிறந்தது.

ரூடால்ப் டீசல் தான் கண்டுபிடித்த இன்ஜினில் காற்றும், அதை மிக அதிக அழுத்தத்தில் அடைப்பதும் தான் பிரதானம். அப்படி செய்வதால் காற்றின் வெப்பநிலை ஏகத்திற்கும் எகிறி இருக்கும். அந்த நிலையில் அதன் மேல் எந்த எரிபொருளைப் போட்டாலும் அது எரியும் என்று கடலை எண்ணெய், தாவர எண்ணெய் என சகலமும் கொண்டு நிகழ்த்திக் காட்டினார்.

ரூடால்ப் டீசல் தான் கண்டுபிடித்த அந்த இன்ஜினுக்கு தனது பெயரை அவர் வைக்கவில்லை.அதிக அழுத்தம்...அதிக வெப்பம்..என நீட்டி முழக்கி ஒரு பெயரைத் தான் வைத்திருந்தார்.

ஆனால் உலகம்,"எதுக்கு குழப்பிக்கிட்டு? நீ எப்படினாலும் சொல்லிட்டு போ, நாங்க உன் பேரையே வச்சி, உன் இன்ஜினை கூப்ட்டுக்குறோம்.." என்றது.

மிக குறுகிய காலத்திலேயே டீசல் இன்ஜின் புகழ் பெறத் துவங்கியது. நிலக்கரியில் ஓடிய பெரிய பெரிய லாரிகளையும், நீராவி இன்ஜினில் முக்கிக் கொண்டு ஓடிய ரயில்களையும் ஓட்ட இந்த டீசல் இன்ஜின் தான் பொருத்தமானது என்ற தேவையும் வந்தது.

இப்படியே சென்று கொண்டிருந்த கால கட்டத்தில், இங்கிலாந்து நாடு, தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் டீசல் இன்ஜினை பயன்படுத்துவது குறித்து ஆராய ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு வருமாறு ரூடால்ப் டீசலை அழைத்தது.

இங்கிலாந்து தந்த அழைப்பை ஏற்று செப்டம்பர் 29 1913 ல் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து டிரஸ்டன் என்ற நீராவிக் கப்பலில் இங்கிலாந்து நோக்கி பயணமானார் டீசல். அன்று இரவு பத்து மணி அளவில் இரவு உணவை முடித்து விட்டு,தன்னை மறுநாள் காலை 6:15 மணிக்கு எழுப்பி விடுமாறும் கூறி விட்டு கப்பலில் தன் அறைக்குச் சென்ற ரூடால்ப் டீசலை அதன் பின் காணவில்லை. கப்பல் இங்கிலாந்தின் கரைகளைத் தொட்ட போது, டீசல் கப்பலில் இல்லை.

டீசல் தன் அறைக்குத் தூங்கப் போகவே இல்லை. அவரது படுக்கை மடிப்புக் கலையாமல் அப்படியே இருந்தது.

டீசல் மாயமாகிப் போன பின் பத்து நாட்கள் கழித்து, அவர் சென்ற கப்பல் பயணித்த வடகடல் பகுதியில் இருந்து மிக மோசமான நிலையில் இருந்த ஒரு ஆண் உடலை ஒரு பெல்ஜியம் படகோட்டி கண்டுபிடித்தார். அடையாளம் காணவே முடியாத அளவில் மிக உருக்குலைந்த அந்த உடலில் இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த உடலை மீண்டும் கடலிலேயே வீசி விட்டார்.

அவர் கொண்டு வந்து தந்த பொருட்களை வைத்து அது தன் தந்தை ரூடால்ப் டீசல் உடையது தான் என அவரது மகன் யூஜின் டீசல் அடையாளம் காட்டினார். இதை வைத்து ரூடால்ப் டீசல் தற்கொலை செய்திருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

ஆனால் அதை எவரும் ஏற்கவில்லை.

அவர் தற்கொலை செய்து கொள்ள துளி கூட வாய்ப்பில்லை.

இவர் கண்டுபிடித்த டீசல் இன்ஜின் அற்புதமாக வேலை செய்தது. அதைப் பற்றிய விவரங்களை ரூடால்ப் டீசல் இங்கிலாந்துக்கு தருவதை ஜெர்மானிய இராணுவம் விரும்பவில்லை. எனவே அவர்கள் தான் டீசலை போட்டுத் தள்ளி விட்டனர் என ஒரு சாராரும், இவரது கண்டுபிடிப்பு தங்கள் தொழிலுக்கு வேட்டு வைத்ததை பொறுக்க முடியாத நீராவி இன்ஜின் கம்பனிகளும், நிலக்கரி சுரங்க முதலாளிகளும் ஒன்று சேர்ந்து இவரை கொன்று விட்டனர் என்று ஒரு சாராரும், வேறு காரணங்களுக்காக இங்கிலாந்து தான் கொன்றது என்றும் கூட இன்று வரையிலும் பேசிக் கொள்கின்றனர்.

ரூடால்ப் டீசல் எப்படி மாயமானர் என்பதைப் பற்றி எவராலுமே எந்த முடிவுக்கும் வரவில்லை. எதோ ஒரு வழியில் ரூடால்ப் டீசல் மறைந்து விட்டார் என்று அவரது மரணத்தை இங்கிலாந்து அறிவித்தது.

ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை உலகிற்கு தந்த அந்த அறிவியலாளருக்கு ஒரு நினைவிடம் கூட ஜெர்மனியில் இல்லை என்பதை உணர்ந்த, ரூடால்ப் டீசல் கண்டுபிடித்த டீசல் இன்ஜினை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஜப்பானில் வைத்திருந்த யமோகா எனும் ஜப்பானியர் ஜெர்மனிக்கு வந்த போது தெரிந்து மிக வருந்தினார். அவரது முயற்சியில் ரூடால்ப் டீசல் தன் இன்ஜினுக்கான ஆராய்ச்சிகளைச் செய்த ஜெர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரில், ஒரு நினைவகம் உருவாக்கப்பட்டு அது ரூடால்ப் டீசலின் நூற்றாண்டு பிறந்தநாளான மார்ச் 18,1958 ல் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இது நிச்சயமாக கொலை தான், இது உறுதியாக தற்கொலை தான் என டீசல் மறைந்த பல ஆண்டுகள் கழித்தும் கூட வாதங்கள் போய்க் கொண்டிருக்க, இது அனைத்திற்கும் சிகரமாக ரூடால்ப் டீசல் தன் கூடவே வைத்திருந்த தன் பெர்சனல் டைரியில், அவர் மாயமான செப்டம்பர் 29,1913 ம் தேதிக்கு உண்டான பக்கத்தில், ஒரு சிலுவையை முன் கூட்டியே வரைந்து வைத்திருந்தார். அதற்கு அடுத்தடுத்த பக்கங்களில் எதுவுமே எழுதி வைக்கவில்லை.

தன் வாழ்வு முடியப் போகும் தேதியை ரூடால்ப் டீசல் முன்கூட்டியே அறிந்து இருந்தாரா? எதற்காக சிலுவையை வரைந்து வைத்திருந்தார்?

எந்தக் கேள்விக்கும்,இது வரையிலும்,எவராலும் எந்த பதிலையும் கண்டுபிடிக்க முடியவில்லை......

நன்றி: துரை மோகன்ராஜு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved