🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு கம்பளத்தார்கள் நேரில் நன்றி!

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதிக்கத் தொடங்கிய காலம்தொட்டு,  ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பும் பிரிட்டீஷ் மஹாராணியின் ஆட்சிக்கோடையின்கீழ் வீழ்ந்து கிடந்தவரை பிரிட்டீஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, கடைசி மூச்சுவரை அந்நிய எதிர்ப்பில் உறுதியாக இருந்து ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தவர்களில், தமிழகத்தில் தொட்டியநாயக்கர்,கள்ளர்,மறவர்,வேட்டுவக்கவுண்டர்  உள்ளிட்ட 68 சமூகத்தினரைப்போல, நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சாதியினர் அடங்குவர். ஆங்கிலேய ஏகாதியபத்தியத்திற்கு அடிபணிய மறுத்த இச்சமூகங்களை அடக்கி ஒடுக்க 1871-இல் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம் 1947 வரை ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இக்கொடுஞ்சட்டத்தால் சொல்லெணாத்துயருக்கு ஆளான இச்சமூகங்களை குற்றப்பழங்குடிகள் என்று 1952-இல் வகைப்படுத்திய இந்திய அரசு, இவர்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாடுமுழுவதும் இச்சமூகங்களுக்கு De-Notified Tribes (DNT) என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 1979-எம்ஜிஆர் ஆட்சியின்போது திடீரென தமிழக அரசு DNC என்று மாற்றியது. இதனால் இச்சமூகங்களுக்கு மத்திய அரசின் சிறப்புத்திட்டங்கள் எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்த இவர்களுக்கு இதன் பாதிப்பு நீண்டகாலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு பிற்பகுதியில் DNT-யின் முக்கியத்துவம் அறிந்த இச்சமூகங்களிடம் தங்களுக்கு மீண்டும் DNT சாதிச்சான்றதழ் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.


தமிழகத்தில் டிஎன்டி பட்டியலுள்ள 68 சமூகங்களையும் ஒருங்கிணைத்து 2014 முதல் சீர்மரபினர் நலச்சங்கம் தொடர் போராட்டத்தை நடத்திவந்ததின் விளைவாக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் DNC, DNT என்ற இரட்டைச்சான்றிதழை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஒரேசாதிக்கு இரட்டை சாதிச்சான்றிதழ் வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீர்மரபினர் நலச்சங்கம், இதனால் எந்தப்பலனுமில்லை என்றுகூறி டிஎன்டி ஒற்றைச்சான்றிதழே தங்கள் இலக்கு என்று தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த 2021-சட்டமன்ற தேர்தலின்போது அன்றைய எதிர்க்கட்சித்தலைவரும், இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்கள் ஆட்சிக்கு வந்தால், சீர்மரபினருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டிஎன்டி சான்றிதழ் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு, இதுகுறித்து அரசின் அறிவிப்பு நீண்டநாட்களாக வராத காரணத்தால் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டாண்டுகளாக தமிழக முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மீண்டும் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

சீர்மரபினரின் இக்கோரிக்கைக்கு பல்வேறு சட்ட காரணங்களைக்கூறிய அதிகாரிகள் தரப்பு, முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருந்துவந்தனர். அதிகாரிகளின் இப்போக்குக்கு கடும் கண்டம் தெரிவித்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து இப்பிரச்சினை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதின் பேரில், சீர்மரபினர் வகுப்பினருக்கு டிஎன்டி என ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் கடந்த வாரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

        

40 ஆண்டுகளும் மேலாக வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்த நூற்றுக்கும் மேற்பட்ட சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தமிழக முதல்வருடனான நன்றி அறிவிப்பு சந்திப்பில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, மு.பழனிச்சாமி, பி.இராமராஜ், நாராயணன், ஆர்.சுந்தரராஜன், டி.சுப்பிரமணியம், சரவணன், சின்னுசாமி, தாமரைச்செல்வன், பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்த தொட்டிய நாயக்கர் சமுதாய நிர்வாகிகள்  டிஎன்டி பரிந்துரை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அதேபோல், அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக முதன்மைச்செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளருமான துரை வைகோ அவர்களுக்கு  தங்களின் நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வெற்றிபெறச் செய்தமைக்கு சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved