🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரு பூனையைக் கண்டு அலறும் ஜப்பான் நகரம்!

மேற்கு ஜப்பானில் ஹிரோஷிமா பகுதியில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்சி நடுங்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான்.

புகுயாமா நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் விஷத்தன்மைமிக்க ரசாயனம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் (க்ரோமியம் 6) என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது.புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என்பதால் காணாமல் போன பூனையிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஹெக்ஸாவலன்ட் குரோமியம் தோல் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அருகில் பணிசெய்யும் ஊழியர்கள் முகமூடிகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிவது கட்டாயம்.

புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாகத் தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தின் விளைவாக அந்தப் பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது.

“பூனைகள் போன்ற சிறிய விலங்குகள் தொழிற்சாலைக்குள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எங்களுக்கு நினைவுறுத்துகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved