🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இசை மகாசமுத்திரம் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகள் நினைவு ஸ்தூபி திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தூத்துக்குடி ,மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமாமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை திறந்து வைத்தார்கள்.


வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவரும், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் இசைஞான குருவாக விளங்கியவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாகவி பாரதியாரைப் போல் ஆங்கில அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவரும், கரகரப்பிரியா ராகத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவரும், மகாகவி பாரதியார் கவிதைகள் எழுத ராகங்களை எடுத்துக் கொடுத்தவரும், பல்வேறு பட்டங்களும், பரிசுகளும் பெற்றவரும், வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவருமான இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், 2018-2019ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின் போது, “இசை அறிஞர்களாலும், வித்வான்களாலும், இசை மகா சமுத்திரம் என்றும், மாமேதை என்றும் போற்றிப் புகழப்பட்ட இசைமாமேதை நல்லப்பசுவாமி அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.



அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.



காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வருடன், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப.,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் திரு. அங்கமுத்து சண்முகம் மற்றும் பொருளாளர் திரு. சாமிநாதன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நினைவுத் தூண் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்தனர்.


இந்நிகழ்வில் புதூர் ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி.சுசிலா தனஞ்செயன், மாவட்ட கவுன்சிலர். திரு.கே.ஞானகுருசாமி, ஒன்றியக் கவுன்சிலர்.திரு.தனஞ்செயன், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், சுவாமிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் வீ.க.பொ.ப.கழகத்தின் மாநிலத் தலைவர் ஆசிரியர்.திரு.சங்கரவேலு, மாவட்டத் தலைவர். தொழிலதிபர்.வலசை.கண்ணன் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டனர்.


இவ்விழாவை ஒட்டி  தமிழக முதல்வர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து  நாளிதழ்களில் விளம்பரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  சுவரொட்டிகளும் இராஜகம்பள சமுதாய அமைப்புகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்தன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved