சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் தனித்தீர்மானம்.
பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை (24.06.2024) சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கிடப்பில் உள்ளதாகவும், இதனால் அச்சமுதாய மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீடு போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அச்சட்டத்தை ரத்து செய்துள்ளதை குறிப்பிட்டு, இதனால் போதிய தரவுகளை திரட்டுவதற்கே ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆணையம் தனது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகளை அரசே திரட்டித் தந்துள்ளதாகவும், சமூக, பொருளாதார மேம்பாடு குறித்த தரவுகள் கிடைக்க வேண்டுமெனில் மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
அப்போது குறிப்பிட்டுப்பேசிய தமிழக முதலவர், பிகார் மாநிலத்தில் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீடு வழங்கிய பின்பும் அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கோடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று (26.06.2024) சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த, ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும்.
விதிகளின்படி சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. 2021 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை. சம வாய்ப்பு, கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலை போன்ற விவரங்களைத் திரட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக இருக்கிறது. ” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

