பத்திரப்பதிவுத்துறையில் நடக்க இருக்கும் அதிரடி மாற்றம்!
வீடு, மனை பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை, எந்த சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்வது உள்ளிட்ட புதிய வசதிகளை, பதிவுத் துறை விரைவில் செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, பத்திர ஆவணங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பாக தடைகள் ஏதாவது உள்ளனவா என்பதை சார் பதிவாளர்கள் சரிபார்ப்பது அவசியமாகும். ஆனால், இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதையும் டிஐஜி அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது.
இதற்காகவே, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை முறைப்படுத்தவே, ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, "ஸ்டார் 2.0" மென்பொருளில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பத்திரப்பதிவு பணிகளை கணினிமயமாக்க, "ஸ்டார்" என்ற மென்பொருள் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2ம் கட்டமாக, "ஸ்டார் 2.0" என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு கடந்த 2018 பிப்ரவரி முதல் அமலுக்கு வந்தது. இதனால், பத்திரப்பதிவில் பெரும்பாலான பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன.
சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை, ஆன்லைன் முறையில் சரிபார்த்து, பதிவுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால் பத்திரப்பதிவு முடித்து, சில மணி நேரத்தில் பத்திர பிரதிகளும் வழங்கப்படுகின்றன. வில்லங்க சான்றிதழ்களையும் எளிதாக பெறக்கூடிய இந்த வசதிகள் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இந்த திட்டம் சிறப்பாக கை கொடுக்கப்பட்ட நிலையில், பத்திரங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. முக்கியமாக சர்வர் மேம்பாட்டு பணிகளுக்கு அவசியம் எழுந்துள்ளது.
எனவே, நடைமுறை ரீதியாக பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுவதை கருத்தில்கொண்டு, "ஸ்டார் 3.0" என்ற புதிய மென்பொருள் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி விரைவில் துவங்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவாறே இருந்தன.
இந்நிலையில், இதற்கான அறிவிப்பு நேற்றைய (26.06.2024) தினம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 2023 - 24 வது நிதியாண்டில் அறிவிக்கப்பட்டபடி, "ஸ்டார் 3.0 மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்க 323.45 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மென்பொருள் தயாரிப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான டெண்டர் கோரும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன" என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால், 95 சதவீத பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறி விடும். அதுமட்டுமல்ல, சம்மந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றில்லாமல், எங்கிருந்தும், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளும் வசதிகள் உருவாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

